தமிழகம் முழுவதும் விதிகளை மீறி அமைக்கப்பட்ட 325 மதுபானக் கடைகள் மூடப்பட்டன
தமிழகத்தில் விதிகளை மீறி 325 மதுபான கடைகள் அமைந்திருந்ததாகவும், அதை தற்போது இழுத்து மூடி விட்டதாகவும் சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் இயக்குனர் ஏ.நாராயணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கக் கூடாது. அதாவது மாநகரம் என்றால் 500 மீட்டருக்குள்ளும், பிற மாவட்டங்களில் ஆயிரம் மீட்டருக்குள்ளும் மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு மதுவிற்பனை விதி கூறுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏராளமான மதுபானக்கடைகள், கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்களுக்கு மிக அருகில் உள்ளது. எனவே, விதிகளை மீறி உள்ள இந்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
900 கடைகள்இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் 900 மதுபானக் கடைகள் விதிகளை மீறி அமைந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அப்போது, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட குழு, 6 ஆயிரத்து 200 கடைகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் சில தவறுகள் உள்ளன. எனவே, மறு ஆய்வு செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்கப்பட்டது.
மூடப்பட்டுவிட்டதுஇந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, ‘தமிழகத்தில் 325 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மட்டுமே விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது 500 மதுபானக் கடைகளை இழுத்து மூட முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விதிகளை மீறி அமைந்திருந்த 325 மதுபானக் கடைகள் உட்பட 500 கடைகள் மூடப்பட்டு விட்டது. விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்ற இந்த ஐகோர்ட்டின் உத்தரவு அமல்படுத்தப்பட்டு விட்டது’ என்று டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.