பெட்ரோல் - டீசல் விலை திடீர் உயர்வு சென்னையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


பெட்ரோல் - டீசல் விலை திடீர் உயர்வு சென்னையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 5 March 2017 11:30 AM IST (Updated: 5 March 2017 11:29 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் - டீசல் விலை திடீர் உயர்வினால் சென்னையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ. 3.78 டீசல் விலை ரூ.1.76 நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது. வழக்கமாக கச்சா எண்ணை விலை உயர்வால் பெட்ரோல் - டீசல் விலை உயரும். திடீரென்று தமிழக அரசு அறிவித்த வாட் வரி விலை உயர்ந்து இருக்கிறது.
மேலும் விலை உயர்வு 1-ந் தேதி அல்லது 31-ந் தேதி நள்ளிரவு தான் அமலுக்கு வரும். ஆனால் நேற்று (4-ந் தேதி) நள்ளிரவு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நள்ளிரவு விலை உயர்த் தப்பட்டதால் அதுபற்றி பலருக்கு தெரியவில்லை. இன்று காலை பெட்ரோல் போட பங்குக்கு வந்த போது விலை உயர்வு பற்றி வாகன ஓட்டிகளுக்கு தெரியவந்தது.

100 ரூபாய்க்கு 1.63 லிட்டர் பெட்ரோல். இன்று அந்த அளவு குறைந்ததால் வாகன ஓட்டிகள் பங்க் ஊழியர்களிடம் கேட்டபோது விலை உயர்வு பற்றி கூறினர். இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீர் விலை உயர்வு பற்றி வாகன ஓட்டிகள் கருத்து வருமாறு:- ரவிச்சந்திரன் (வட பழனி): -  இன்று காலை டி.வி.யில் தான் பெட்ரோல்  - டீசல் விலை உயர்வு பற்றிய செய்தியை பார்த்தேன். அடிக்கடி விலையை ஏற்றிக் கொண்டே செல்கிறார்கள். நம் நாட்டில் தான் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது. 

மலேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் விலை மிகவும் குறைவு. இந்த விலை உயர்வு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போன்றவற்றுக்காக போராட்டம் நடத்துகிறோம். பெட்ரோல் விலை உயர்வுக்கும் போராட்டம் நடத்த வேண்டும்.

கேத்தரின்:- அத்தியாவசிய தேவைகளுக்கு மோட்டார் சைக்கிள் தான் உதவுகிறது. காலையில் தான் விலை உயர்வு பற்றி தெரியும். இதனால் மற்ற பொருட்கள் விலையும் உயர்ந்துவிடும். ஜெகன் (ஆட்டோ டிரை வர், காசிமேடு): - ஏற்கனவே ஆட்டோ டிரைவர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறோம். திடீரென்று விலை உயர்ந்துள்ளதால் இன்னும் பாதிப்புதான் ஏற்படும். இதனால் பயணிகளிடம் கூடுதலாக பணம் கேட்கும் சூழ்நிலை உருவாகும் போது அவர்களுக்கு விலை உயர்வு பற்றி சொல்லி புரிய வைக்க வேண்டும். இது எங்களுக்கு மேலும் கஷ்டத்தையே ஏற்படுத்தும்.

சுகன்யா -ஈஸ்வரி (குரோம்பேட்டை):- பெட்ரோல் - டீசல் விலை பற்றி பங்க்கில் பெட்ரோல் போட்டபோது தான் தெரியும். இந்த விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்கள் தானாக உயர்ந்துவிடும். நமக்கு எதுவுமே மலிவாக கிடைப்பதில்லை. எல்லாமே விலை உயர்ந்து தான் இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் கால் டாக்சிகளில் கட்டணம் உயர்ந்துவிடும். எப்படி பார்த்தாலும் இதனால் மிக பாதிப்பு பொது மக்களுக்குத்தான்.

பாலச்சந்தர் (வங்கி ஊழியர், விருகம்பாக்கம்):- இன்று காலை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதுவும் லிட்டருக்கு ரூ. 3.78 உயர்ந்து இருப்பது மிகவும் அதிகம். இது மற்ற துறைகளிலும் பாதிப்பை உண்டாக்கும். இப்படி அடிக்கடி விலையை உயர்த்தும் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். பெட்ரோல் - டீசல் விலையை கட்டுக்குள் வைத்து கொண்டாலே விலைவாசி தானாக குறைந்துவிடும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வேலப்பன் (மருத்துவ பிரதிநிதி, கே.கே.நகர்):- வாட் வரி விதிப்பால் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது. காலையில் 100 ரூபாய் பெட்ரோல் போட்ட போது முந்தைய அளவு குறைந்து இருந்ததை பார்த்து பங்க் ஊழியர்களிடம் கேட்டேன். அப்போது தான் விலை உயர்வு பற்றி கூறினார்கள். நான் பைக்கில் தான் அதிக நேரம் பயணம் செய்வேன். இதனால் தினமும் பெட்ரோல் போடுவேன். இந்த விலை உயர்வு கண்டிப்பாக என்னை போன்றவர்களுக்கு சிறிய பாதிப்புகளை ஏற்படுத்தத்தான் செய்யும்.

Next Story