கள்ளக்காதல் தகராறு: பெண் போலீஸ் வீட்டில் போலீஸ்காரர் குத்திக்கொலை, போலீஸ்காரர் ஆத்திரம்
பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் போட்டியில் போலீஸ்காரர் குத்திகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்,
இதுபற்றிய விவரம் வருமாறு:- திருவள்ளூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவரது கணவர் ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. திருவள்ளூர் நேதாஜி தெருவின் பின்புறம் உள்ள கோகினூர் அவென்யூவில் சரண்யா வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். அவருடன் அக்காள் தேவி, தாத்தா சுருளியப்பன் ஆகியோரும் வசித்து வருகின்றனர்.
சரண்யாவுக்கும், திருவள்ளூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றும் கல்லணை மற்றும் சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றும் அமிர்தராஜ் ஆகியோருடன் கள்ளக்காதல் இருந்தது. இருவரும் அடிக்கடி சரண்யா வீட்டிற்கு வந்து சென்றனர். அப்போது சரண்யாவை அடைவதில் கல்லணைக்கும், அமிர்தராஜிக்கும் போட்டி நிலவியது. இது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இருவரையும் சரண்யா சமாளித்து வந்தார்.
நேற்று இரவு 10 மணி அளவில் சரண்யா வீட்டுக்கு அமர்தராஜ் வந்தார். இதுபற்றி அறிந்த கல்லணை, செல்போனில் தொடர்பு கொண்டு அமிர்தராஜ், சரண்யா இருவரையும் கண்டித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கல்லணை, திருவள்ளூர் ஆயுதப்படையில் காவலர்களாக பணியாற்றும் நண்பர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது 24), சந்திரன், சந்தானகுமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் சரண்யா வீட்டுக்கு சென்றார். அவர்கள் அங்கிருந்த அமிர்தராஜ், சரண்யாவுடன் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த அமிர்தராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனைவரையும் குத்தி விடுவதாக மிரட்டினார்.
உடனே அங்கிருந்த போலீஸ்காரர்கள் அனைவரும் அமிர்தராஜை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது சுந்தரபாண்டிக்கு பலத்த கத்தி குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் சந்திரன், சரண்யாவின் அக்காள் தேவி, தாத்தா சுருளியப்பன் ஆகியோருக்கும் கத்தி குத்து விழுந்தது. அலறல் சத்தம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது. அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்த போது போலீஸ்காரர் சுந்தரபாண்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுண் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுந்தரபாண்டியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சந்திரன், தேவி, சுருளியப்பனுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீஸ்காரர் சந்திரன் உடல்நிலை மோசமாக இருந்தது. அவரை மேல்சிகிச்சைக் காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திரனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதொடர்பாக சரண்யா, அமிர்தராஜ், சரண்யாவின் அக்காள் தேவி, கல்லணை, சந்தானகுமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி முகாம் நடந்தது. இதில் போலீஸ்காரர்கள் கல்லணை, அமிர்தராஜ், சரண்யா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கமே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அமிர்தராஜ் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தாலும் செல்போன் மூலமும், அடிக்கடி வீட்டிற்கு வந்தும் சரண்யாவுடன் பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார். இதேபோல் கல்லணையும் நெருங்கி பழகி இருக்கிறார். இந்த பழக்கமே தற்போது கொலையில் முடிந்துள்ளது.
கள்ளக்காதல் தகராறில் சரண்யாவுடன் தொடர்பு இல்லாத போலீஸ்காரர் சுந்தரபாண்டி நண்பருக்காக பலியாகி விட்டார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் கொலை செய்யப்பட்டது குறித்து உசிலம்பட்டியில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருவள்ளூருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பெண் போலீஸ் வீட்டில் போலீஸ்காரர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story