குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2017 12:37 PM IST (Updated: 5 March 2017 12:36 PM IST)
t-max-icont-min-icon

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


நெல்லை, 

தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. இதை கண்டித்து நெல்லையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூகவலைதள நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் சமூக வலைதள நண்பர்கள் குழுவினர் வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி அங்கிருந்த அமலைச்செடிகளை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 3-வது நாளாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கொக்கிரகுளம் குறுந்துடையார்புரம் ரெயில்வே பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாமிரபரணி ஆற்றின் அருகில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சமூகவலைதள நண்பர்கள் சார்பில் இன்று பாளை மார்க்கெட்திடலில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை முதல் மார்க்கெட் திடலில் மாணவர்கள், இளைஞர்கள் குவியத் தொடங்கினர். காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

போராட்டபந்தலில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது போல் மாலை அணிவித்து வைத்திருந்தனர். உண்ணாவிரதத்தில் ஏராளமான கல்லூரி மாணவ - மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு உள்ளனர். போராட்டம் கூறித்து அவர்கள் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் விவசாயம் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம். இனியும் தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரை வழங்கினால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். பல்வேறு தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Next Story