ரேஷனில் பொருள்களை சரியாக வழங்காவிட்டால் தி.மு.க. போராட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ரேஷனில் பொருள்களை சரியாக வழங்காவிட்டால் தி.மு.க. போராட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 March 2017 2:10 PM IST (Updated: 5 March 2017 2:10 PM IST)
t-max-icont-min-icon

ஒருவாரத்துக்குள் பொருள்களை சரியாக வழங்காவிட்டால் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. போராட்டம் நடத்தும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதி ஜெகன்நாதன் தெருவில் உள்ள சிந்தாமணி நியாய விலைக்கடை, ராஜா தோட்டம் பகுதியில் உள்ள அமுதம் நியாய விலைக்கடை, வார்டு எண்.64 இல் சன்னதி தெருவில் உள்ள நியாய விலைக்கடைகளில் ஆய்வு செய்தார். அங்கு பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா? எவ்வளவு நாட்களாக பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்படாமல் இருக்கின்றன என்பதை ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.  

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடந்த மூன்று மாதங்களாகவே சரியாக பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை. குறிப்பாக பாமாயில், பருப்பு போன்றவை கடந்த மூன்று, நான்கு மாதமாக சரியாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அரிசி, சர்க்கரை தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது இந்த புகாரின் அடிப்படையில் நான் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கைக்கு அந்த துறையின் அமைச்சராக இருக்கும் காமராஜூம், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜூம் முறையான விளக்கம் சொல்லாமல் நான் அரசியல் ஆக்குவதற்காக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இன்று என்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வுப் பணியை மேற்கொண்டேன். அந்த கடைகளில் இருக்கும் ஊழியர்களிடத்தில் பேசினேன்.

பொருட்களை வாங்குவதற்கு காத்திருந்த பொது மக்களிடமும் விளக்கமாக பேசியிருக்கிறேன். கடையில் இருக்கும் ஊழியர்கள் ஆதாரமாக ரிஜிஸ்டர் செய்யக்கூடிய நோட்டுப் புத்தகங்களை எடுத்துக் காட்டினார்கள். டிசம்பர் மாதம் தான் பாமாயில் வந்திருக்கிறது, அதேபோல பருப்பும் ஜனவரி மாதத்தில் தான் வந்திருக்கிறது. அதுவும் குறைவாக வந்திருக்கிறது என்பதை என்னிடத்தில் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். பொதுமக்களும் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறோம் என்கிற வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலை என்னுடைய கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் உள்ளது.

எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக அவர்கள் தொகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வுப் பணியை மேற்கொண்டு முறையான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒரு வாரகாலத்திற்குள் இந்த அரசு இதனை சரிசெய்யவில்லை என்று சொன்னால் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்னால் தி.மு.க. அறப்போராட்டத்தை நடத்தும் என்பதை இந்த அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கே: - பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தி.மு.க. அழிந்து வருகிறது என்ற நோக்கில் பேசியிருக்கிறார். அதுகுறித்து?

ப:- பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். மரியாதைக்குரியவர். மாண்புக்குரியவர். அதுமட்டுமல்ல அவர் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் அவர்களுடைய கட்சியை வளர்ப்பதற்கு தமிழகத்தில் முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வேதனையின் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு இதுபோன்ற கருத்துகளை அவர் பேசிக் கொண்டிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் அரசியலில் முகவரி இல்லாத அநாதைகளாக ஆக்கப்பட்டிருக்கும் நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. அதற்கு பல சான்றுகளும் உண்டு.

ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரை சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டு மென்று சொன்னால், மேலாதிக்கம் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி. 
அந்தக் கட்சியிலே இன்றைக்கு அவர் ஒரு அமைச்சராக வந்திருக்கிறார் என்று சொன்னால் அதற்கு பின்னணி திராவிட இயக்கம் தான் என்பதை அவர் மறந்துவிட மாட்டார், அப்படி மறந்திருந்தால் அவருக்கு நான் நினைவுப்படுத்துகிறேன்.

கே:- நெடுவாசலில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசும் மாநில அரசும் இதுகுறித்து ஒரு வெளிப்படையான முடிவை அறிவிக்கவில்லையே?

ப:- மாநில அரசு காலம் தாழ்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசு இதற்கு அனுமதிதராது என்று அறிவித்திருந்தாலும், மத்திய அரசு அந்த அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதால் தான் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம், கைவிட்டு விட்டோம் என்று சொன்னால் நிச்சயமாக இந்தப் போராட்டம் முடிந்து விடும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story