வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா


வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா
x
தினத்தந்தி 1 April 2017 5:30 AM IST (Updated: 1 April 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை,

வருகிற 12-ந் தேதி நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா நேற்று முன்தினம் சென்னை வந்தார். அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தேர்தல் பொது பார்வையாளர் பிரவீண் பிரகாஷ், செலவின பார்வையாளர் அபர்ணா வில்லூரி, காவல் பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா, சிறப்பு பார்வையாளர்கள் சமீர் டெக்ரிவால், மல்லிகார்ஜூனா உட்டாரே ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இதைத்தொடர்ந்து நேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியையும் பார்வையிட்டார். பின்னர் அவர் காமராஜர் சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கிய பிரச்சினை

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக ஏராளமான புகார்கள் வருகின்றன. இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாக்காளர்களை மிரட்டுவோரும் கடுமையாக தண்டிக்கப்படுவர்.

இது தொடர்பான புகார் களை தேர்தல் கமிஷனின் சட்டப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்த புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அனைத்து புகார்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

‘என் ஓட்டு விற்பனைக்கு அல்ல’

தேர்தலில் பணம் வாங்காமல் ஓட்டளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கவும், ‘என் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்பது போன்ற உறுதிமொழியை ஏற்கச்செய்யவும் மாணவ தன்னார்வலர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பணிகளை கண்காணிக்க, குடியிருப்போர் மேம்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பணம் வழங்குவது தொடர்பான புகார்களை விசாரிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புதிதாக பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

வருமான வரித்துறை

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகப்படியான பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்ய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். விமான நிலையம், ரெயில் மற்றும் பஸ் நிலையம் போன்ற முக்கியமான பகுதிகள் வழியாக அதிகமான பணம் எடுத்துச்செல்லப்படுகிறதா? என்பதை இந்த குழுவினர் ஆய்வு செய்வர்.

மேலும் சட்டவிரோத பண வினியோகத்தை கண்டறிய தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூடுதல் மது விற்பனை

இதைப்போல தொகுதியில் மது விற்பனையையும் கண்காணித்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக மது விற்பனையானால் அது குறித்து விற்பனையாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் தகவல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.

தொகுதியில் அதிகப்படியான மது வினியோகம் செய்வதை தடுக்க வணிகவரித்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன், வாக்காளர்களை கவர மது வினியோகம் செய்யக்கூடாது என வர்த்தகர்களையும் எச்சரித்து உள்ளோம்.

துணை ராணுவம் வருகை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இதுவரையில் எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனையும், ரோந்து பணியும் நடைபெற்று வருகிறது.

வெளியூர் வாகனங்கள் தனிக்கவனத்துடன் சோதனை செய்யப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் நாளை (இன்று) முதல் சென்னை வர உள்ளனர். வழக்கத்தைவிட 3 மடங்கு அதிக துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை (இன்று) அவர்கள் வந்தவுடனே போலீசாருடன் இணைந்து வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளேயும், வெளியேயும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. வாக்காளர்கள் எந்த வித அச்சமின்றி வாக்களிப்பதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் தேர்தல் ஆணையம் வழங்குகிறது. அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் இடைத்தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனைக் கூட்டம்

இந்த ஆய்வின்போது தமிழக தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, தேர்தல் கமிஷன் பொது இயக்குனர்கள் (செலவினம்) திலீப் ஷர்மா, திரேந்திர ஓஜா, மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண்.பி. நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story