நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா ரஜினிகாந்த்-கமல்ஹாசன் செங்கல் எடுத்து கொடுத்தனர்
நடிகர் சங்க புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு செங்கல் எடுத்து கொடுத்தனர்.
சென்னை,
நடிகர் சங்க புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு செங்கல் எடுத்து கொடுத்தனர். இளம் நடிகர்கள் மற்றும் பழம்பெரும் நடிகர்-நடிகைகள் பலர் விழாவில் பங்கேற்றார்கள்.
ரூ.26 கோடியில் கட்டிடம்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் காலி மனையில் ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டப்படும் என்று புதிதாக பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள் அறிவித்தனர். 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், நடன பயிற்சி மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், பிரிவியூ தியேட்டர், எடிட்டிங், டப்பிங் தியேட்டர்கள், அலுவலக அறைகள், நீச்சல் குளம் போன்றவைகளை இந்த கட்டிடத்தில் அமைக்கவும் திட்டமிட்டனர்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடிகர் சங்க வளாகத்தில் நேற்று காலை நடந்தது. நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு விழாவில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அனைவரும் அதிகாலையிலேயே அங்கு திரண்டார்கள். எல்லோரும் செங்கல்கள் எடுத்து வந்திருந்தனர்.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன்
மனையின் மையப்பகுதியில் அகலமான குழி தோண்டி வேத மந்திரங்கள் ஓதப்பட்டு புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நடந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் ஆகிய இருவரும் மாலை அணிவித்து வரவேற்றனர்.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பூமி பூஜை நடந்த பகுதிக்கு சென்று செங்கல்கள் எடுத்து கொடுத்தனர். அப்போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. நடிகர்-நடிகைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நாசர், விஷால், பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளும் செங்கல்கள் எடுத்து கொடுத்தனர். நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, சத்யராஜ், விஜயகுமார், கார்த்திக், பார்த்திபன், விவேக், ஜீவா, சிம்பு, சிவகார்த்திகேயன், பரத், சிபிராஜ், நடிகைகள் மீனா, சிம்ரன், தேவயானி, பிந்து மாதவி, வரலட்சுமி சரத்குமார், நந்திதா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு செங்கல்கள் கொடுத்தார்கள்.
முன்னாள் கதாநாயகிகள்
நாடக நடிகர்கள் செங்கல்களை தலையில் சுமந்து வந்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட கொடுத்தார்கள். பலர் நன்கொடைகளும் வழங்கினார்கள்.
முன்னாள் கதாநாயகிகள் வைஜயந்தி மாலா, சரோஜாதேவி, வாணிஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, ஜெயசித்ரா, காஞ்சனா, ஷீலா, சச்சு, எம்.என்.ராஜம், லதா, அம்பிகா, ராதா, துளசி, சாரதா, ரோகிணி, பூர்ணிமா பாக்யராஜ், லிசி, ஜெயமாலினி ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு ஆர்வத்தோடு செங்கல்கள் எடுத்து கொடுத்தார்கள். சில நடிகைகள் பட்டுச்சேலை அணிந்து குழந்தைகளை அழைத்து வந்து இருந்தனர்.
விழாவில் மேலும் கலந்துகொண்ட நடிகர்-நடிகைகள் விவரம் வருமாறு:-
நடிகர்கள் ராஜேஷ், ஐசரி கணேஷ், பிரசன்னா, மோகன், பிரகாஷ்ராஜ், அருண்குமார், சுந்தர்.சி, ஆனந்தராஜ், செந்தில், ஜீவன், ராஜ்கிரண், ரமணா, ஸ்ரீமன், சரத்பாபு, ஆர்.வி.உதயகுமார், ரகுமான், பாண்டியராஜன், சாந்தனு, வின்சென்ட் அசோகன், மனோபாலா, பூச்சி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், உதயா, மயில்சாமி, டி.பி.கஜேந்திரன், பசுபதி, மன்சூர் அலிகான், கலையரசன், தம்பிராமையா, கதிர்.
டைரக்டர்கள்
நடிகைகள் கோவை சரளா, ஐஸ்வர்யா ராஜேஷ், தன்ஷிகா, காயத்ரிரகுராம், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.ஈ.ஞானவேல், எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எடிட்டர் மோகன், ஜாகுவார் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அடிக்கல் நாட்டு விழாவையொட்டி நடிகர் சங்க வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Next Story