ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் விஜயபாஸ்கர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்


ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் விஜயபாஸ்கர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட சேனியம்மன் கோவில் தெரு, ரத்தின சபாபதி தெரு, பெருமாள் கோவில் தெரு, திருநாவுக்கரசர் தோட்டம், திலகர் நகர் உள்பட பல இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று நேற்று ஓ.பன்னீர்செல்வம் ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவருடன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், வடசென்னை ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட பல நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விஜயபாஸ்கர்

பிரசாரத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, அவரை மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லலாம் என்று நான் விஜயபாஸ்கரிடம் கூறினேன். ஜெயலலிதாவுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் நம்மை வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் விஜயபாஸ்கர் காதில் வாங்கி கொள்ளவில்லை.

எனவே ஜெயலலிதா மரணத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முன்பும், பின்பும் நடந்தது என்ன? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தினால் தான் நம்முடைய தர்மயுத்தம் வெற்றி பெறும். விரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும். அம்மா அரசு அமையும். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story