சி.ஆர்.சரஸ்வதி பிரசார வேன் மீது செருப்பு, கற்கள் வீச்சு ஆர்.கே.நகரில் பரபரப்பு


சி.ஆர்.சரஸ்வதி பிரசார வேன் மீது செருப்பு, கற்கள் வீச்சு ஆர்.கே.நகரில் பரபரப்பு
x
தினத்தந்தி 1 April 2017 3:45 AM IST (Updated: 1 April 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வின் இரு அணிகள் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை,

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வின் இரு அணிகள் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. சி.ஆர்.சரஸ்வதி பிரசார வேன் மீது செருப்பு, கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பள்ளிவாசல் அருகே பிரசாரம்

சென்னை ஆர்.கே.நகர் நேதாஜி நகரில் உள்ள பர்மா ஜூம்மா தமிழ் முஸ்லிம்கள் பள்ளிவாசல் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கூட்டணி கட்சியான இந்திய தேசிய முஸ்லிம் லீக் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அ.தி.மு.க. (அம்மா) கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மதியம் அங்கு பிரசாரம் செய்ய வந்தார். இதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் அந்த மசூதியில் பிரசாரம் செய்யும் முடிவை மாற்றிக் கொண்டார்.

பின்னர் தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் உள்ள மஸ்ஜிதே முகமதி, காயிதே மில்லத் மதராசா கமிட்டி பள்ளிவாசல் பகுதியில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனன் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது அங்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், பாஸ்கரன் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்க வந்தனர்.

போலீசார் சமாதானம்

அப்போது அ.தி.மு.க. (அம்மா) கட்சியினர் ‘சசிகலா வாழ்க... டி.டி.வி.தினகரன் வாழ்க... என்று கோஷம் எழுப்ப, அதற்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சியினர் ஒழிக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. இரு அணியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். பின்னர் அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்களை சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.

சாலைமறியல்

தண்டையார்பேட்டை வினோபா நகரில் நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு தினகரனுக்கு ஆதரவாக சசிகலா அணியினர் பிரசாரம் செய்ய வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே வினோபா நகர் பகுதியில் தேர்தல் பணிக்காக வந்துள்ள வெளியூர் ஆட்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மேலும் பதற்றத்தை சமாளிக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

செருப்பு, கற்கள் வீச்சு

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக நேற்று மாலை மேயர் பாசுதேவ் தெரு, வீராகுட்டி தெரு சந்திப்பில் பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அங்கு வந்தனர். இதனால் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோரை வேறு பக்கம் செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் செல்லாமல் அங்கேயே இருந்தனர்.

இதனால் சி.ஆர்.சரஸ்வதியின் பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது. மேலும் சிலர் கற்கள், தக்காளி போன்றவற்றை வீசினர். அதனை தொடர்ந்து சி.ஆர்.சரஸ்வதி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது நீங்களே இவ்வாறு செய்யலாமா? என ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து சி.ஆர்.சரஸ்வதி கேட்டார்.

இந்த சம்பவங்களால் ஆர்.கே.நகரில் நேற்று தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

Next Story