தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கான சிக்னலை துண்டித்தால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் டி.வி. சேனல்களுக்கு சுற்றறிக்கை
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கான சிக்னலை துண்டித்தால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என கட்டண டி.வி. சேனல்களுக்கு அரசு கேபிள் டி.வி. சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெ.குமரகுருபரன், கட்டண டி.வி. சேனல்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து டி.வி. ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.ஓ. என்ற ஆபரேட்டர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மார்ச் (கடந்த மாதம்) 30-ந்தேதி சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வந்தது. அதில், அனலாக் கேபிள் டி.வி. சிக்னலை நிறுத்துவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தள்ளிவைப்பு
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையிலான கேபிள் டி.வி. சேவையை அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான உரிமம் கேட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தமிழக அரசு கடந்த 5.7.12 மற்றும் 23.11.12 ஆகிய தேதிகளில் விண்ணப்பித்தது. ஆனால் இதுவரை அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த உரிமம் தொடர்பாக அந்த அமைச்சகத்துக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
நிலுவையில் விசாரணை
இதுவரை தமிழகத்தில் டிஜிட்டல் சேவை இன்னும் அமலுக்கு வரவில்லை என்பதும், அதுதொடர்பான வழக்கு கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கான சிக்னலை துண்டிக்கக்கூடாது என்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.
இதன் மூலம் சென்னைக்கு அனலாக் மற்றும் டிஜிட்டல் ஆகிய 2 முறைகளிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சிக்னல் வழங்குவது நியாயப்படுத்தப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவு பல டி.வி. ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
எனவே மார்ச் 30-ந்தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.க்கான சிக்னலை துண்டித்தால், ஐகோர்ட்டின் உத்தரவை மீறியதாக அமைந்துவிடும். ஐகோர்ட்டின் உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story