துபாயில் இருந்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது
சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து 1 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து 1 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார். இதேபோல் கொழும்புக்கு ஹெராயின் போதை பொருள் கடத்த முயன்ற வாலிபரும் கைதானார்.
துபாய் விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கேரளாவைச் சேர்்ந்த கலத்்தில் வடக்காயில்(வயது 29) என்பவர் பாதுகாப்பு சோதனை பகுதியை கடந்து வந்தார்.
துபாயில் இருந்து கேரளாவுக்கு நேரடியாக விமானம் இருந்தும் சென்னைக்கு வந்தது பற்றி அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
தங்க கட்டிகள் சிக்கியது
இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது கைப்பையை சோதனை செய்தனர். அதில் செல்போன் வைக்கும் அட்டை பெட்டியில் தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் அணிந்து இருந்த ஆடைகளுக்கு இடையே தங்க கட்டிகள் மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட 13 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கலத்தில் வடக்காயிலை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக தங்க கட்டிகளை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என விசாரித்து வருகின்றனர்.
போதை பொருள்
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தப்பட உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது கொழும்பு செல்லும் விமானத்தில் ஏற வந்த இலங்கையை சேர்ந்த முனீர்பாஷா(35) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் பால் பவுடர் டப்பா இருந்தது.
வாலிபர் கைது
அதை பிரித்து பார்த்தபோது பால் பவுடருக்கு பதிலாக அதில் ஹெராயின் போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். ரூ.2½ கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், முனீர்பாஷாவின் விமான பயணத்்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?, இவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா?, இவருக்கு அதிகாரிகள் யாராவது உதவினார்களா? என போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்்தி வருகின்றனர்.
Next Story