பிளஸ்-2 உயிரியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து


பிளஸ்-2 உயிரியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பிரிவில் 3 மதிப்பெண் கேள்விகள் பல மறைமுகமாக கேட்கப்பட்டதால் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

சென்னை, 

பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பிரிவில் 3 மதிப்பெண் கேள்விகள் பல மறைமுகமாக கேட்கப்பட்டதால் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக 200-க்கு 200 மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.

உயிரியல் தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் பிளஸ்-2 தேர்வில் நேற்று உயிரியல் தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த சில மாணவ, மாணவிகள் கூறியதாவது:-

உயிரியல் தேர்வு கடினமாகத்தான் இருந்தது. உயிரியலில் தாவரவியல் பிரிவுக்கு 75 மதிப்பெண்களும், விலங்கியல் பிரிவுக்கு 75 மதிப்பெண்களும் உண்டு. தாவரவியல் பிரிவில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் சில மறைமுகமான கேள்விகளாக இருந்தன. விலங்கியல் பிரிவிலும் ஒரு மதிப்பெண் கேள்விகள் பலவும், ‘ஆ’ பிரிவில் 3 மதிப்பெண் கேள்விகள் பலவும் மறைமுகமான கேள்விகளாக இருந்ததால் கடினமாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் உயிரியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.

தாவரவியல் தேர்வு எளிது

தாவரவியலை தனிப்பாடமாக படித்தவர்களுக்கான தாவரவியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். சென்னையில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் மை பூசியும், வண்ணப்பொடிகளை பூசியும் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். பள்ளியில் இருந்து அவர்கள் பிரிந்து செல்வதால் அடுத்து மாற்றுச்சான்று வாங்கும்போது தான் பார்க்க முடியும் என்று நண்பர்களின் செல்போன் எண்களை கேட்டு வாங்கிச் சென்றனர். 

Next Story