தமிழக நூலகங்களுக்கு 3 ஆயிரம் புத்தகங்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழக நூலகங்களுக்கு 3 ஆயிரம் புத்தகங்களை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூற வருபவர்கள் பொன்னாடைகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்குமாறு அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் அரிய புத்தகங்கள் குவிந்தன.
சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் தங்கள் பகுதிகளுக்கு அந்த புத்தகங்களின் ஒரு பகுதியை வழங்கிடுமாறு ஏராளமான கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகளை ஏற்று, புதுக்கோட்டையில் தி.மு.க. நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் ஞானாலயா இல்லத்திற்கு நேரில் சென்று 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார்.
இதேபோல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பெரம்பலூர் மாவட்ட மாணவி செ.செம்பருத்தி, வந்தவாசி நூலக வட்ட தலைவர் மு.முருகேஷ், திருச்சி மாவட்டம், தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு, திருநின்றவூர், கொசவன்பாளையம் நூலக காப்பாளர் செகதீசன், திருமழிசை நூலகப் பணியாளர் நாகபூஷணம், திருவள்ளூர் மாவட்டம், பேரத்தூர் பகுதியைச் சேர்ந்த கலையரசன், கீரனூர் பேரூராட்சி நூலகம், மன்னார்குடி நகர நூலகம், கிருஷ்ணகிரி மாவட்டம், புலியானூர் கிராமத்தில் உள்ள குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பு, சென்னை, வடபழனி அறிஞர் அண்ணா பொதுநல மன்றம், திருவெறும்பூர் கோ.சண்முகவேலு, சென்னை சன் ஷைன் தனியார் பள்ளி, திருவாரூர் மாவட்டம், திருவெண்காடு பள்ளி நூலகம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story