ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கி 19 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் திரிபுரா முதல்-மந்திரி பெற்றோர்-ஆசிரியர்களுக்கு அறிவுரை
மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு, 19 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சர்கார் சென்னையில் பெற்றோர்-ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை,
சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளிவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் மூத்த முதல்வர் புருஷோத்தமன், முதன்மை நிர்வாக மேலாளர் மகேஸ்வரி, பள்ளியின் முதல்வர் கலையரசி, இயக்குனர் வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சர்கார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒழுக்கமான வாழ்க்கைக்கும், ஓயாத மக்கள் பணிக்கும் சொந்தக்காரரான இவர், கடந்த 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து 19 ஆண்டுகள் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். எளிமையான மனிதராக வலம் வருபவரான இவருக்கு சொந்தமாக வீடோ, காரோ இல்லை. வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். இவரது வங்கி இருப்பு ரூ.10 ஆயிரத்து 800 மட்டுமே. மாதம் ரூ.5 ஆயிரம் தான் சம்பளமாக பெற்று வருகிறார்.
நேர்மை உறுதிமொழி
விழாவில், மாணிக் சர்கார் பள்ளியின் வெள்ளிவிழா மலரை வெளியிட்டார். பள்ளி நிர்வாகம் சார்பில் ‘இந்தியாவின் முன்மாதிரி முதல்வர்’ என்ற சிறப்பு விருது மாணிக் சர்காருக்கு வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களும், மாணிக் சர்கார் முன்னிலையில் ‘நேர்மை உறுதிமொழி’யை எடுத்துக் கொண்டனர். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாணிக் சர்கார் வழங்கி கவுரவித்தார்.
விழாவில், மாணிக் சர்கார் பேசியதாவது:-
தாய் தான் முதல் ஆசிரியர்
ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் தான் முதல் ஆசிரியர். உலகத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்பவளே அவள் தான். அம்மா, அப்பா என மனிதர்களை அடையாளம் காட்டுவதில் இருந்து மகனோ, மகளோ உலகத்தின் அத்தனை விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள ஆசானாக விளங்குவது அந்த தாய் மட்டுமே.
ஒவ்வொரு தாய்க்கும் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். அறிவாளியாக, திறமைசாலியாக, வல்லவனாக மட்டும் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். நல்லவர்களாக வளரவும் பழக்குங்கள்.
சொந்த தாய் தந்தையை மட்டும் குழந்தைகள் மதித்தால் போதாது. மற்ற தாய் தந்தையரையும் மதிக்க வேண்டும். சக மனிதர்களை மதிக்க வேண்டும். நம்மைவிட மற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது வைக்கும் மரியாதையும் அன்பும் ஒரு போதும் குறைந்து விடக் கூடாது.
கேள்விகள் கேட்டால் திட்டாதீர்கள்
குழந்தைகள் அடிக்கடி கேள்விகள் கேட்டால் நீங்கள் திட்டாதீர்கள். ஏனென்றால் நீங்கள் தானே டீச்சர். உங்களிடம் கேட்காமல் யாரை கேட்பார்கள்? சரியான பதில் தெரிந்தால் சொல்லுங்கள். தெரியவில்லை என்றால், ‘மகனே நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. ஆனால் மாலைக்குள் நான் விசாரித்து உனக்கு சொல்கிறேன்’ என்று கூறுங்கள். சொல்கிற மாதிரி செய்யுங்கள். தவறான பதிலை மட்டும் சொல்லவே சொல்லாதீர்கள்.
‘படி.. படி.. மார்க் எடு...’ என்று மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்காமல் உங்கள் நடத்தை மூலமாக நல்ல விஷயங்களை உணர்த்துங்கள். ஏதாவது ஒரு வகையில் நம்மை விட வசதி வாய்ப்பு குறைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள், காயம் பட்டவர்கள் கஷ்டங்களோடு போராடும்போது வேடிக்கை பார்த்தபடி கடந்து போக குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காதீர்கள். கஷ்டப்படும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு உதவி செய்து கைத்தூக்கிவிட வழி காண தூண்டுங்கள்.
பெற்ற தாய்க்கு பிறகு ஆசிரியர்களுக்கு தான் நல்ல மனிதர்களை உருவாக்கும் பொறுப்பும், ஆற்றலும் உண்டு. புனிதமான இந்த தொழிலை முழுமையாக பயன்படுத்தி நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் கடமையை தொடர வேண்டுகிறேன். புத்தகங்களும், மதிப்பெண்களும் முக்கியம்தான். ஆனால் நல்ல வாழ்க்கைக்கு அவற்றை விட அதிகம் தேவைப்படுவது நல்ல எண்ணங்களும், ஆரோக்கியமான பார்வையும் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story