ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி சென்னையில் சமுதாய நல்லிணக்க பாதயாத்திரை


ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி சென்னையில் சமுதாய நல்லிணக்க பாதயாத்திரை
x
தினத்தந்தி 2 April 2017 2:15 AM IST (Updated: 1 April 2017 7:58 PM IST)
t-max-icont-min-icon

ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று சமுதாய நல்லிணக்க பாதயாத்திரை தொடங்கியது.

சென்னை,

கடந்த 2016–ம் ஆண்டு மே மாதம் முதல் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை விசுவ இந்து பரி‌ஷத் சமுதாய நல்லிணக்க பேரவை பல்வேறு சமுதாயப்பணிகள் மூலம் கொண்டாடி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று காலை சமுதாய நல்லிணக்க பாதயாத்திரை தொடங்கியது.

கிரிக்கெட் வீரர்

பேரணியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் பாலசந்திரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், உ.வெ.சுதர்சன ஆச்சாரியர், சென்னை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுப்பையா, விசுவ இந்து பரி‌ஷத் சமுதாய நல்லிணக்க பேரவை வட தமிழக அமைப்பாளர் என்.டி.முருகானந்தம் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

உற்சாக வரவேற்பு

பாதயாத்திரையின்போது ரதத்தில் ராமானுஜர் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று மதியம் பாதயாத்திரைக்குழு, அமைந்தகரையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியை அடைந்தது. அங்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் பாதயாத்திரை தொடங்கி நேற்று மாலை பூந்தமல்லியை அடைந்தது.

பூந்தமல்லி குமணன்சாவடி சந்திப்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று இரவு பாதயாத்திரை குழுவினர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தங்கினார்கள்.

பாதயாத்திரை நிறைவு

பூந்தமல்லியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 2–வது நாளாக நடைபெறும் பாதயாத்திரையை விசுவ இந்து பரி‌ஷத் தமிழக – கேரள பொறுப்பாளர் வெங்கடேஷ் தொடங்கி வைக்கிறார்.

மாலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோவிலில் உள்ள ராமானுஜர் சன்னதிக்கு பாதயாத்திரை குழுவினர் வந்தடைகின்றனர். அங்கு பரமஹம்ச அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்கி பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாதயாத்திரையை நிறைவு செய்துவைக்கிறார்.

பாதயாத்திரைக்கான ஏற்பாடுகளை வசந்த பவன் ஓட்டல் உரிமையாளர் ரவி தலைமையிலான விழாக்குழுவினர் செய்தனர்.


Next Story