திருமங்கலம் – நேரு பூங்கா இடையே மெட்ரோ ரெயில் சேவை ஜூன் மாதத்தில் தொடங்கும் அதிகாரிகள் தகவல்
சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில் திருமங்கலம் – நேரு பூங்கா இடையே வருகிற ஜூன் மாதத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரம் முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரம் 2–வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன. இதில் முதல் கட்டமாக 2–வது வழித்தடத்தில் உள்ள உயர்த்தப்பட்ட பாதையான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் 2 வழித்தடத்திலும் சுரங்கப்பாதையிலும், உயர்மட்ட பாதையிலும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
இந்த சுரங்கப்பாதையில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக இருப்பதால், எப்போது ரெயில் சேவை தொடங்கப்படும்? என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:–
ஜூன் மாதம்திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை உள்ள 7.6 கிலோ மீட்டர் தூரப்பணிகள் முற்றிலும் நிறைவடைந்து உள்ளன. இந்தபாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னைக்கு வந்து இறுதிக்கட்ட ஆய்வு பணியில் ஈடுபட உள்ளார்.
இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் மாதம் ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
இந்த பாதையில் கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையாகும். திருமங்கலத்தில் இருந்து எழும்பூர் வரை சுரங்கப்பாதையாகும். இதில் திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரை சிக்னல் மற்றும் மின்சார இணைப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது.
வண்ணாரப்பேட்டை– விம்கோ நகர்வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான விரிவாக்கத்தில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய 8 ரெயில் நிலையங்கள் வர உள்ளன. இதில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய 2 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைய உள்ளன. மீதம் உள்ள 6 ரெயில் நிலையங்களும் உயர்த்தப்பட்ட பாதையில் வர உள்ளன.
வண்ணாரப்பேட்டையில் இருந்து முதல் 2 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. ‘ஆப்கான்ஸ்’ நிறுவனத்துக்கு பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மீதம் உள்ள 7 கிலோ மீட்டருக்கு விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. 2018–ம் ஆண்டு இந்தப்பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.