தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 2 மாதங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்
2 மாதங்களில் அனைவருக்கும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு விடும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சம் குடும்பத்தினருக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2005–ம் ஆண்டுக்கு பிறகு ரேஷன் கார்டுகள் புதியதாக அச்சிடப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஓட்டப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.இதனை தவிர்க்க மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தற்போது உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதியதாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு, ரேஷன்கார்டுகளில் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டு, தற்போது 99 சதவீத பணிகள் முடிந்து, ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று உள்ளது.
தற்போது முதல் கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில் நடந்த அரசு விழாவில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். மேலும் காணொலி காட்சி மூலம் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பொருட்கள் வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்து, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
புதிய ஸ்மார்ட் கார்டுகள்பொது வினியோக திட்டத்தை மேலும் செம்மைபடுத்தும் நோக்கில் ரூ.330 கோடி செலவில் 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 89 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாகவும் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 840 நியாய விலைக் கடைகள் வாயிலாக, அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண் எண்ணெய் மற்றும் சிறப்பு பொது வினியோகத்திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் ஆகியவை ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
நியாயவிலைக் கடைகளில் தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைப்பதை உறுதிப்படுத்தவும், போலி ரேஷன் கார்டுகள் மற்றும் போலி பட்டியலிடுதல் ஆகியவற்றை தவிர்க்கவும், ஒரு முழுமையான கண்காணிப்பு அவசியம் எனக் கருதப்பட்டது. பொது வினியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கி, அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களை கணினி மூலம் ஒருங்கிணைத்து, அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக கண்காணித்து, இணையதளம், மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி வாயிலாக நுகர்வோரின் குறைகளை பெற்று அவற்றை தீர்க்கும் வகையில் இணையவழி சேவைகள் ஏற்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டது.
கணினி மயமாக்கும் பணிஇதனை கருத்தில் கொண்டு, ஜெயலலிதா 2013–ம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி எண் 110–ன் கீழ் இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எடுத்து செல்லப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு பொது வினியோக திட்டம் கணினி மயமாக்கப்படும் என அறிவித்தார்.
மேலும் 2012–2013 மற்றும் 2013–2014 ஆகிய ஆண்டுகளில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்களின் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2015–ம் ஆண்டு 330 கோடி ரூபாய் செலவில் பொது வினியோகத்திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கவும், அதனை ஐந்தாண்டு காலம் பராமரிக்கவும், ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கணினி மயமாக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் எண்கள் சேகரிப்புஅதனடிப்படையில், 2015–ம் ஆண்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய எந்திரங்கள் நிறுவப்பட்டு பொது வினியோகத் திட்ட செயல்பாடுகள் அனைத்தும் இணைய வழியே கண்காணிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பொருட்டு, விற்பனை முனைய எந்திரங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, புதிய தரவு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளில் உள்ள சுமார் 6 கோடியே 90 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 5 கோடியே 85 லட்சம் உறுப்பினர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தயாரிக்கும் பணிஇதன்படி 1 கோடியே 89 லட்சம் ரேஷன் கார்டுகளில் 1 கோடியே 17 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு முழுமையான ஆதார் விவரங்களும், 70 லட்சம் ரேஷன் கார்டுகளில் குறைந்தபட்சம் ஒரு ஆதார் எண் விவரங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்த ரேஷன் கார்டுகளில், 99 சதவிகித ரேஷன் கார்டுகளுக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரின் ஆதார் எண் விவரங்களாவது சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு தற்போது வழங்கப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டுகளின் விலையை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையின்றி வழங்கப்படும்.
ரேஷன் கார்டுதாரர்கள், அவர்களுடைய ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விவரங்களை அவ்வப்போது குறுஞ்செய்தி வாயிலாக அறியும் வகையில் இதுவரை 1 கோடியே 67 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களின் கைபேசி எண்களும் சேகரிக்கப்பட்டு விவரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் வினியோகிக்கப்பட்ட விவரத்தினை ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அவர்களின் கைபேசிக்கு அனுப்பப்படுவதன் மூலம் போலி பட்டியலிடுதல் தவிர்க்கப்படும்.
போலி கார்டுகள்பொது வினியோக திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளதால், நியாய விலை கடைகளுக்கான அத்தியாவசிய பொருட்களின் மாதாந்திர ஒதுக்கீடுகள் இணையவழி மூலம் மேற்கொள்ளவும், கிடங்குகள் முதல் நியாயவிலைக் கடைகள் வரையிலான அத்தியாவசிய பொருட்களின் நகர்வினை உடனுக்குடன் கண்காணிக்கவும் இயலும்.
மேலும் ஒரு நபர், ஒன்றிற்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளில் அவரின் பெயர் இடம் பெறுவது தவிர்க்கப்படுவதால், போலி ரேஷன் கார்டுகள் மற்றும் போலி பட்டியலிடுதல் போன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். ரேஷன் கார்டுதாரர்கள் பொது வினியோகத்திட்டம் சார்ந்த குறைகளை தெரிவிப்பதற்கு ஏதுவாக 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொது வினியோக திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுகள் குறித்த மனுக்கள், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் குறித்த மனுக்கள் ஆகியவற்றை இணையவழி மூலமாக சமர்ப்பிக்கலாம். இத்தகைய மனுக்களை துறை அதிகாரிகள் இணைய வழியாக ஆய்வு செய்து, தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் கார்டுகள் தொடர்பான சேவைகள் விரைவில் கிடைத்திட வழி ஏற்படும். மேலும், இத்தகைய சேவைகளை பொதுசேவை மையங்கள் மூலமாகவும் பொதுமக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 மாதத்தில் முடிக்கப்படும்இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த பணி, இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டுகளை பெறுகிறவரை தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் மூலம் ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் கார்டுதாரர்களுக்கு அவர்களது கைபேசியில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்ததற்கு பின்னால், ரேஷன் கார்டுதாரர்கள் அங்காடிகளுக்கு நேரில் சென்று தங்களது ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
அம்மா விட்டுச் சென்ற மக்கள் நல திட்டங்கள், தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் அமைந்துள்ளது. மிக அதிகமானவர்களுக்கு மிக அதிக நன்மைகளை பயப்பது தான் உண்மையான மக்களாட்சி என்பதால், இங்கே தொடங்கி வைக்கப்பட்டிருக்கிற ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் அதிகமான மக்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.