தமிழகம் முழுவதும் நாளை முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது


தமிழகம் முழுவதும் நாளை முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது
x
தினத்தந்தி 1 April 2017 9:45 PM GMT (Updated: 1 April 2017 6:58 PM GMT)

லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நாளை முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை போக்குவரத்துக்கு பயன்படுத்தக் கூடாது, பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி உயர்வு போன்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30–ந்தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் வடமாநிலங்களில் இருந்து அரிசி, பருப்பு, உளுந்து மற்றும் தானிய வகைகள் வரத்து தடைபட்டு உள்ளது. அதேபோல் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் முட்டை, கோழி மற்றும் சிமெண்ட், கம்பி போன்ற கட்டுமான பொருட்களும் தேங்கிக் கிடக்கின்றன.

போராட்டம் தொடங்குவதற்குமுன் வடமாநிலங்களில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த லாரிகள் சென்னை மாதவரத்தில் உள்ள சி.எம்.டி.ஏ. ‘டிரக் டெர்மினல்’ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவை மீண்டும் தங்கள் மாநிலங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தகம்

போராட்டம் குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியதாவது:–

போராட்டத்தால் தமிழகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வரத்து தடைபட்டுள்ளதுடன், விலை உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களில் ரூ.3 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரூ.200 கோடி வரை லாரி உரிமையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மாநில அரசு போராட்டத்தை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர, எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தநிலையில், 2–வது கட்டமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு கூட அரசுக்கு நேரம் இல்லை. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

சேலத்தில் ஆலோசனை

தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் லாரிகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசியதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. தமிழகத்தில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துதலில் ஊழல் அதிகமாக நடக்கிறது.

கியாஸ் டேங்கர் லாரிகள்

எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்வரை வேலைநிறுத்தம் தொடரும். போராட்டத்தை தீவிரப்படுத்த கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்திடம் ஆதரவு கேட்டுள்ளோம். அவர்களும் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை (திங்கட்கிழமை) முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது.  இவ்வாறு அவர் கூறினார்.

தென்னிந்திய எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில், ‘‘தென்னிந்திய லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய 6 மாநிலங்களில் நாளை முதல் சுமார் 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது’’ என்றார்.


Next Story