டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில், மாணவர்கள் போராட்டம்


டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில், மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 2 April 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை,

போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வறட்சி நிவாரணம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் அமைப்பு சார்பில் நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து மாணவர்கள் அமைப்பினர் கூறியதாவது:–

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் தொடர் போராட்டங்களை பொதுமக்களும், மாணவர்களும் நடத்தி வருகின்றனர். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பது என்பது கண்டிக்கத் தக்க செயல் ஆகும்.

அடுத்த கட்ட போராட்டம்

தமிழக விவசாயிகள் உரிய வறட்சி நிவாரணம் கேட்டு டெல்லியில் 15 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு அவர்களை கண்டு கொள்ளாமல் அவர்களை அவமானப்படுத்தி வருகிறது. ஆகவே உடனே மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரிய வறட்சி நிவாரணத்தையும் வழங்க வேண்டும். விவசாயிகள் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் இல்லையெனில் எங்கள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவோம்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கைது

அதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை போலீசார் கைது செய்ய முயலும் போது மாணவர்களுக்கும். போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story