த.மா.கா. சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்


த.மா.கா. சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 April 2017 1:04 AM IST (Updated: 2 April 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தென்சென்னை வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதனை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், துணைத்தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன், மாவட்ட தலைவர்கள் சைதை கே.மனோகரன், பிஜுசாக்கோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

விவசாயிகள் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு

தமிழக விவசாய சங்கங்கள் சார்பில், 3–ந் தேதி (நாளை) நடைபெற உள்ள மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. முழு ஆதரவு அளிக்கிறது. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பது வேதனை அளிக்கிறது.

இன்று தொடங்கப்பட்டுள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை தியாகராயநகர், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

இதற்கிடையே ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:–

லாரிகளுக்கான காப்பீட்டு தொகை உயர்வை திரும்பப்பெற வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நாள்தோறும் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள் தேக்கம் அடைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் தென்னிந்திய லாரி உரிமையாளர் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story