ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் பேட்டி
ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணப்பாட்டுவாடா செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு சென்னை திரும்பிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–
அனைத்து கட்சி கூட்டம்கேள்வி:– அனைத்துக் கட்சி கூட்டம் பற்றியும், விவசாயிகள் பிரச்சினை பற்றியும் சொல்லுங்கள்.
பதில்:– 19 நாட்களாக தலைநகர் டெல்லி மாநகரத்தில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் அதுகுறித்து அக்கறையோடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
நாங்கள் அவர்களை காலையில் சந்தித்த நேரத்தில், எப்படியாவது இதற்கொரு முடிவு கட்டுவதற்கு நீங்கள்தான், தி.மு.க. தான் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும், உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் என்று வேதனையோடு எடுத்துச்சொன்னார்கள். நானும் அவர்களிடத்தில் சொல்லி இருக்கிறேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அதன்மூலம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமா என்பதை பற்றி நாங்கள் யோசிப்பதாக சொல்லியிருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளில் நிச்சயமாக தி.மு.க. ஈடுபடும்.
பணப்பட்டுவாடாகேள்வி:– ஆர்.கே.நகரில் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியும், தினகரன் அணியும் பணப்பட்டுவாடா செய்கின்ற வேளையில், நேற்று இரவு பொருட்களும் வினியோகம் செய்ததாக தவகல் வந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறதா? எதிர்க்கட்சியைச் சார்ந்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.
பதில்:– நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது சம்பந்தமாக சில அதிகாரிகள், காவல்துறையை சார்ந்தவர்கள் அதற்கு துணை நிற்கிறார்கள் என்ற புகார் தந்து, அது நியாயம் என்பதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு அவர்கள் எல்லாம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பணப்பட்டுவாடா மற்றும் பல பொருட்களை கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றுகின்ற அந்த பணியிலே இன்றைக்கு ஈடுபட்டிருக்கும் சூழ்நிலையில், நிச்சயமாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.