சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது வாகன ஓட்டிகள் அதிருப்தி
சுங்க கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
சென்னை,
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 394 சுங்கச்சாவடிகள் (டோல்கேட்) அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 43 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் பட்டறை பெரும்புதூர், சூரப்பட்டு, வானகரம் (திருவள்ளூர்), சென்னசமுத்திரம் (காஞ்சீபுரம்) உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் நேற்று சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இதில் வானகரத்தில் உள்ள சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.30–ம், வந்து செல்ல ரூ.45–ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கட்டண உயர்வுவர்த்தக ரீதியான இலகு ரக வாகனங்கள், மினி பஸ் கட்டணம் ஒரு முறை செல்ல ரூ.45–ல் இருந்து ரூ.50 ஆகவும், வந்து செல்ல ரூ.70–ல் இருந்து ரூ.75 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. பஸ், லாரிகள் (2 ஆக்சில்) ஒரு முறை செல்ல ரூ.100–ல் இருந்து ரூ.105 ஆகவும், வந்து செல்ல ரூ.150–ல் இருந்து ரூ.155 ஆகவும் கட்டணம் உயர்ந்து உள்ளது.
வர்த்தக வாகனங்கள் (3 ஆக்சில்) ஒரு முறை செல்ல ரூ.110–ல் இருந்து ரூ.115 ஆகவும், வந்து செல்ல ரூ.165–ல் இருந்து ரூ.170 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பொக்லைன் (6 ஆக்சில்) வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.155–ல் இருந்து ரூ.160 ஆகவும், வந்து செல்ல ரூ.235–ல் இருந்து ரூ.245 ஆகவும் கட்டணம் உயர்ந்து உள்ளது.
10 சதவீதம்ராக்கெட் உதிரிபாகங்கள், காற்றாலை மின்சார உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கருவிகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.190–ல் இருந்து ரூ.200 ஆகவும், வந்து செல்ல ரூ.285–ல் இருந்து ரூ.295 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சராசரியாக 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிருப்திசுங்க கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
இது குறித்து வானகரம் சுங்கச்சாவடியை கடந்து சென்ற மதுரையை சேர்ந்த லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி செல்கிறோம். லாரி உரிமையாளர்களை பாதிக்கும் வகையில் தற்போது சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது. இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.
மாதவரத்தில் லாரிகளுக்கு சரக்குளை ஏற்றி அனுப்பும் முகவர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘தற்போது லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. டயர் செலவு, பராமரிப்பு செலவுகள் அதிகரித்து கொண்டே போவதால், கட்டுப்படியான வருமானம் கிடைப்பதில்லை. சுங்க கட்டணத்தை உயர்த்தி கொண்டே போனால் லாரி தொழிலே அழிந்து போகும் நிலை ஏற்படும். சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு 430 கிலோ மீட்டர் செல்ல சுங்க கட்டணமாக ரூ.5 ஆயிரத்து 200–ம், சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.4,500–ம் அளிக்க வேண்டி உள்ளது. தற்போது கட்டண உயர்வால் இந்த தொகை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே தொடர்ந்து லாரி தொழில் செய்ய முடியுமா? என்ற அவலநிலை ஏற்பட்டு உள்ளது’’ என்றார்.