தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 April 2017 5:32 AM IST (Updated: 2 April 2017 5:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என சட்டசபையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி பேசினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபையில் நேற்று கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. (பா.ஜனதா) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர்களுக்கு சாதி சான்றிதழ்

மும்பையில் 70 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்களுக்கு அதற்கான உரிய ஆதாரம் இருந்தால் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிழைப்பு தேடி வந்த தமிழர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வருகின்றனர். ஆனால் சாதி சான்றிதழ் இல்லாததால் தங்கள் சாதிக்கு ஒதுக்கப்படும் பகுதியில் தமிழர்களால் தேர்தலில் போட்டியிட முடிவதில்லை. அரசு வேலை, கல்லூரிகளில் சேர முடிவதில்லை. பொது பிரிவில் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை சிறந்த கல்வி நிறுவனங்கள், அரசு வேலையில் சேர்க்கமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே 15 ஆண்டுகளுக்கு மேல் மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு மாநில அரசு சாதி சான்றிதழ் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே, இந்த விவகாரம் குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.

தாராவி புனரமைப்பு திட்டம்

இதைத்தொடர்ந்து கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசுகையில், “சயான்கோலிவாடா பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவின்போது வந்தவர்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட 1 முதல் 25 சிந்திகேம்ப் கட்டிடங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். எனவே அரசு அந்த கட்டிடங்களை பி.பி.டி. சால்களை போல புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பா.ஜனதாவின் தீவிர முயற்சியால் தாராவி மக்களுக்கு குடிசை புனரமைப்பு திட்டத்தின் கீழ் 350 சதுர அடியில் வீடுகள் கட்டிக்கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வரவில்லை. பொதுமக்களின் நலன் கருதி அரசே தாராவி புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய வீட்டு வசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story