‘களை’ இழந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம், வேலைக்காரர்கள் மட்டுமே உள்ளனர்


‘களை’ இழந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம், வேலைக்காரர்கள் மட்டுமே உள்ளனர்
x
தினத்தந்தி 2 April 2017 12:17 PM IST (Updated: 2 April 2017 12:17 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரது போயஸ்கார்டன் வீடு 24 மணி நேரமும் களைகட்டி இருக்கும்.

சென்னை, 

ஜெயலலிதாவின் தாய் சந்தியா ஆசையாக வாங்கிய இடம். தாயின் நினைவாக வேதா நிலையம் என்று அந்த வீட்டுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார். அந்த வீட்டை ஜெயலலிதா மட்டு மல்ல அவரை உயிராக நேசிக்கும் தொண்டர்களும் ஒரு கோவில் போலவே போற்றினார்கள்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக பலத்த போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு என்று அந்த இல்லமே எப்போதும் பரபரப்பாக இருக்கும். அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், பிரதமர்கள் என்று பலர் தடம் பதித்த இடம் அது.

ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அந்த வீட்டை ஒரு நினைவு இல்லாமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொண்டர்கள் முன்வைத்தனர். ஆனால் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக 33 ஆண்டுகள் அதே வீட்டில் அவருடன் வாழ்ந்த சசிகலா, ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு போயஸ் கார்டனில் தங்கினார். அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அங்கு தங்கினார்கள். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா ஜெயிலுக்கு சென்றதும் போயஸ் கார்டன் இல்லத்தில் தங்குவதை அவரது குடும்பத்தினர் தவிர்த்து விட்டனர்.

சசிகலா இருந்தவரை அவரை சந்திக்க நான் அங்கு சென்றேன். இனிமேல் அங்கு செல்ல வாய்ப்பில்லை. எங்களுக்கு பெசன்ட் நகரில் வீடு இருக்கிறது சந்திக்க அங்கு வாருங்கள். அல்லது கட்சி அலுவலகத்துக்கு வாருங்கள். போயஸ்கார்டன் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று தினகரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி இருக்கிறார்.

எனவே போயஸ்கார்டன் பக்கம் யாரும் திரும்பி பார்க்காததால் வெறிச்சோடி கிடக்கிறது. பிரமாண்டமான வெளிப்புற கேட் மூடப்பட்டு ஒரு சிலர் மட்டும் காவல் பணியில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் மட்டும் தினமும் அலுவலகத்தில் சென்று பணிகளை கவனித்து வருகிறார்கள். 2 வேலைக்கார பெண்கள் மட்டும் வீட்டில் தங்கி பராமரிக்கிறார்கள். பூஜைகள், ஹோமங்கள் என்று தினமும் மணம் கமழும் அந்த இல்லம் இப்போது பார்ப்போர் இதயத்தை நொறுங்க வைத்து விடும். பல ஆண்டுகளாக சமையல் கூடத்தில் அடுப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருந்தது. விருந்தினர்களை உபசரிக்க, பணியாளர்களுக்கு வழங்க என்று எப்போதும் சமையல் கூடம் பரபரப்பாக செயல்படும். ஆனால் இப்போது மூடப்பட்டு விட்டது. அதேபோல் ஜெயலலிதா, சசிகலா பயன்படுத்திய பல அறைகள், பூஜை அறை, நூலகம் அனைத்தும் மூடி கிடக்கிறது.

பூஜை அறை உள்ளிட்ட சில முக்கியமான அறைகளை ஊழியர்கள் அவ்வப்போது சுத்தம் செய்து பராமரிக்கிறார்கள். வீட்டை சுற்றி பூக்களும், பசுஞ்சோலையுமாகத்தான் காட்சியளிக்கும். இப்போது சில பெரிய மரங்கள் சாய்ந்து விட்டன. இனி அம்மாவின் வீடு என்னவாகும்? என்ற ஏக்கம் அவரது விசுவாசிகளிடம் பெரும் ஏக்கமாகவே இருக்கிறது.

Next Story