நாளை விவசாயிகள் சார்பில் நடத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிமுக(புரட்சித்தலைவி அம்மா) அணி ஆதரவு
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டி நடத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிமுக(புரட்சித்தலைவி அம்மா) அணி ஆதரவு அளிப்பதாக பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து நிறுவனங்களின் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணத்திற்கு தமிழக அரசு கோரிய முழுத் தொகையையும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு மற்ற மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் மாநில விவசாய சங்க தலைவர் சர்தார் பி.எம்.சிங் நேற்று தமிழக விவசாயிகளை சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் தங்கள் அமைப்பின் சார்பில் தினமும் 50 விவசாயிகளை போராட்டத்தில் பங்கேற்க அனுப்பி வைப்பதாக கூறினார். இதேபோல் உத்தரகாண்ட், அரியானா, ஜம்மு–காஷ்மீர் மாநில விவசாய சங்க நிர்வாகிகள் தமிழக விவசாயிகள் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டி, நாளை நடத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிமுக(புரட்சித்தலைவி அம்மா) முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணி ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
Next Story