நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைத்தால் மக்கள் தடுக்க வேண்டும்


நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைத்தால் மக்கள் தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 April 2017 5:45 PM GMT (Updated: 2 April 2017 1:37 PM GMT)

நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அரசு அமைத்தால் அதனை மக்கள் தடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

டாஸ்மாக் கடைகள்

பா.ம.க. தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், அதையொட்டி 500 மீட்டர் தொலைவிலும் அமைந்திருந்த மதுக்கடைகளை (டாஸ்மாக்) தமிழக அரசு மூடியிருக்கிறது. ஆனால், மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அனைத்து குற்றங்களுக்கும், சீரழிவுகளுக்கும் மதுதான் மூலகாரணமாக இருப்பதால் மதுவை முழுமையாக ஒழித்து தமிழகத்தை மதுவில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். அந்த இலக்கை எட்டும் நோக்கத்துடன் தான் உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை போராடி சாலையோரங்களில் 3,321 மதுக்கடைகளை மூட வைத்திருக்கிறது.

வருமானம் முக்கியம்

ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட 604 மதுக்கடைகளையும் சேர்த்தால் பா.ம.க. மூலமாக மட்டும் 3,925 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலையோரங்களில் மதுக்கடைகள் இருப்பதால் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பதால் தான் இந்த வழக்கை வக்கீல் பாலு மூலம் தொடர்ந்து பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது.

மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு 3,321 மதுக்கடைகளையும் முழுமையாக மூடுவதற்கு அரசு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மீண்டும் திறப்பதன் மூலம் மக்கள் நலனில் தங்களுக்கு அக்கறையில்லை; மது விற்பனையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானமும் தான் முக்கியம் என்பதை அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

தடுக்க வேண்டும்

சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் அரசின் திட்டத்தை மக்கள் நினைத்தால் எளிதாக முறியடிக்க முடியும். 2003–ம் ஆண்டில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய தமிழக அரசு அவசர அவசரமாக தனியார் கட்டிடங்களில் தான் மதுக்கடைகளை திறந்தது. இப்போது மூடப்பட்ட 3321 மதுக்கடைகளையும் புதிதாக திறக்க வேண்டுமெனில், மக்களுக்கு சொந்தமான கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து தான் நடத்த முடியும். இத்தகைய மதுக்கடைகளுக்கு வாடகைக்கு இடம் தர மறுப்பதன் மூலம் புதிய மதுக்கடைகள் திறப்பதை எளிதில் தடுக்க முடியும்.

வாடகைக்கு ஆசைப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் அமைக்க இடம் கொடுத்தால், மதுக்கடைகள் வழியாக செல்லும் தங்கள் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தில் வாழும் சகோதரிகளும் பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்து புதிய மதுக்கடைக்கு வாடகைக்கு இடம் தருவதை சமூகப் பொறுப்புள்ள மக்கள் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது. அதையும் மீறி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு தடுக்க வேண்டும். மதுவுக்கு எதிரான பா.ம.க.வின் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறையாகும் வரை பா.ம.க. கட்சி ஓயாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story