ஆர்.கே.நகர் பகுதியில் ஜெயலலிதா பாணியில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்
வாக்காளர்களிடம் நீங்கள் செய்வீர்களா? என்று கேள்விகேட்டு ஜெயலலிதா பாணியில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அதன்படி ஓ.பன்னீர்செல்வம் நேற்று கொருக்குப்பேட்டை பகுதிக்குட்பட்ட எழில் நகர், தொப்பை விநாயகர் கோவில் வீதி சந்திப்பு, அண்ணாசாலை, அன்னை சத்தியாநகர், கருமாரியம்மன் நகர், கோபால் ரெட்டி நகர், கார்னேசன் நகர் குடியிருப்பு, குமரன் நகர், சிவாஜி நகர், வைத்தியநாதன் பாலம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், கூட்டணி கட்சியான இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி உள்பட நிர்வாகிகளும் வாக்கு சேகரித்தனர்.
கொள்கை–கோட்பாடு‘மின் கம்பம்’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வாக்காளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
இங்கே 122 எம்.எல்.ஏ.க்கள் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் ஜெயலலிதா எதற்காக நம்மை எம்.எல்.ஏ.வாக ஆக்கினார்? என்று நினைத்து பார்க்க வேண்டும். அவருடைய கொள்கை–கோட்பாடு என்ன? என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் மக்கள் ஆதரவை பெற்று பிரசாரம் செய்கிறோம். நீங்கள் (சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்) மக்கள் எதிர்ப்பை பெற்றிருக்கிறீர்கள். மதுசூதனனுக்கு ஆதரவு கூடி செல்வதை பொறுக்க முடியாமல் மு.க.ஸ்டாலின் கடுமையாக எங்களை தாக்கி பேசிவருகிறார். ஊழலை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? சர்காரியா கமிஷன் முதல் 2ஜி வரை ஊழலின் மையமாக தி.மு.க. இருக்கிறது.
ஜெயலலிதா பாணியில்...டி.டி.வி.தினகரன் கட்சியின் உறுப்பினர் கூட இல்லை. இந்த சூழ்நிலையில் அவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். நீங்கள் (வாக்காளர்கள்) மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே மதுசூதனை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். நீங்கள் செய்வீர்களா? மாற்றி காட்டுவீர்களா? இவ்வாறு அவர் பேசினார்.
ஜெயலலிதா தனது ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்தின்போதும், தனது பேச்சை முடிக்கும் முன்பு வாக்காளர்களை பார்த்து ‘நீங்கள் செய்வீர்களா? செய்வீர்களா?’, என்று கேட்பது வழக்கம். தற்போது அதே பாணியை ஓ.பன்னீர்செல்வம் நேற்று கடைபிடித்தார். அவர் அப்படி பேசும்போது கூட்டத்தில் இருந்து கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.