டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு


டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு
x
தினத்தந்தி 4 April 2017 2:41 AM IST (Updated: 4 April 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான உறுதியான செயல் திட்டம் தான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு

தேசிய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதம் 14–ந் தேதி தொடங்கி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழகத்தில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு அ.தி.மு.க. (அம்மா) சார்பில் உளப்பூர்வமான, தார்மீக ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி; நதிகள் இணைப்பு; காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பருவமழை பற்றாக்குறை காரணமாக வரலாறு கண்டிராத வறட்சி; குடிதண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றுக்கு மாநில அரசு கேட்டிருக்கும் முழு தொகையையும் அளித்தல் போன்ற உன்னதமான கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணல் காந்தியடிகள் காட்டிய அறவழியில் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயங்கள் அடிப்படையில் இந்த ஆதரவினை அ.தி.மு.க. (அம்மா) அளிக்கிறது.

தேசிய அளவிலான செயல் திட்டம்

இயற்கைப் பேரிடர்களையும், பருவநிலை மாற்றங்களினாலும், நீதிமன்ற ஆணைகளின்படி நடந்துகொள்ள மறுக்கும் சில மாநிலங்களின் குறுகிய சிந்தனைகளாலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுவரும் இன்னல்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனில் அதற்கு தேசிய அளவிலான உறுதியான செயல் திட்டம் தான் ஒரே தீர்வு.

அத்தகைய தீர்வை வேண்டி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கும், அதனை ஆதரித்து அமைதி வழியில் நடைபெறும் அறப்போராட்டங்களுக்கும் அ.தி.மு.க. (அம்மா) எப்பொழுதும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.


Next Story