புதிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஐகோர்ட்டு வக்கீல்கள் 7–ந் தேதி போராட்டம்


புதிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஐகோர்ட்டு வக்கீல்கள் 7–ந் தேதி போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2017 2:41 AM IST (Updated: 4 April 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு, இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.

சென்னை,

இந்த பரிந்துரையின் அடிப்படையில், வக்கீல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு சட்ட திருத்தத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அந்த சட்டத்திருத்தத்தில், கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட வக்கீல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்கு விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத வக்கீல்களிடம் இருந்து அவரது கட்சிக்காரர் இழப்பீடு பெறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் வக்கீல்களுக்கு எதிராக உள்ளது என்று கூறி, இந்திய பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த திருத்தத்தை திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்றும் பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் வருகிற 7–ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 7–ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். இதேபோல, பெண் வக்கீல்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.


Next Story