2 வது நாளாக பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் 4 மாடிக்கு அனுமதி வாங்கி 7 மாடி கட்டபட்டு உள்ளது
4 அடுக்கு மாடிக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது - என தியாகராயநகர் பகுதி குடியிருப்பு நல சங்க செயலாளர் கண்ணன் கூறி உள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 2-வது நாளாக பற்றி எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று காலை சுமார் 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நேற்றிரவு 11.20 மணிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இதனையடுத்து காலை 7 மணியளவில் கட்டிடத்தின் முன்பகுதியும் இடிந்து விழுந்தது.
தி. நகர் உஸ்மான் சாலை முழுவதும் தீயால் புகை மூட்டம் சூழ்ந்திருக்கிறது. தீயணைப்பு வீரர்கள், அதைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
தீ விபத்தால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால், போலீசாரின் அறிவுரையின்பேரில் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்
இந்நிலையில், சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில் தீ விபத்து என மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தீ பிடித்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு உள்ளது.
அடுக்குமாடியின் மேல்நின்று சென்னை சில்க்ஸ் தீவிபத்தை பார்க்கவேண்டாம் என குடியிருப்புவாசிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி உள்ளனர்.
4 அடுக்கு மாடிக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது - என தியாகராயநகர் பகுதி குடியிருப்பு நல சங்க செயலாளர் கண்ணன் கூறி உள்ளார்.
தியாகராய நகரில் உள்ள எந்த கடைகளும் விதிகளை கடைபிடிக்கவில்லை. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.
கட்டிடம் எரிந்த நிலையில் உள்ளதால் பக்கத்து கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டிடத்தை இடிக்க முடியும் என கட்டிட இடிப்பு வல்லுநர் பொன்லிங்கம் கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது தீயணைப்பு பணிகள் முழுமையாக முடிந்த பிறகு கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.தீயணைப்பு பணி முடிந்ததும் கட்டிடத்தை முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும். 24 மணிநேரம் எரிந்துள்ளதால் கட்டிடம் வலுவிழந்து இருக்கும். கட்டிடத்தை இடிக்கும் போது அருகில் உள்ள கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படாது .கட்டிடம் உள்பக்கம் விழும் வகையில் இடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story