சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீயை அணைத்த பிறகு அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்


சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீயை அணைத்த பிறகு அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்
x
தினத்தந்தி 1 Jun 2017 11:44 AM IST (Updated: 1 Jun 2017 11:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீயை அணைத்த பிறகு அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.


சென்னை

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 2-வது நாளாக பற்றி எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று காலை சுமார் 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நேற்றிரவு 11.20 மணிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இதனையடுத்து காலை 7 மணியளவில் கட்டிடத்தின் முன்பகுதியும் இடிந்து விழுந்தது.

தி. நகர் உஸ்மான் சாலை முழுவதும் தீயால் புகை மூட்டம் சூழ்ந்திருக்கிறது. தீயணைப்பு வீரர்கள், அதைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

தீ விபத்தால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால், போலீசாரின் அறிவுரையின்பேரில் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில் தீ விபத்து என மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தீ பிடித்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு உள்ளது.

அடுக்குமாடியின் மேல்நின்று சென்னை சில்க்ஸ் தீவிபத்தை பார்க்கவேண்டாம் என குடியிருப்புவாசிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி உள்ளனர்.

தியாகராய நகரில் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தை வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.தீ அணைக்கப்பட்டு விட்டது, தீ கங்குகள் மீண்டும் எரிந்து வருகிறது.தமிழக அரசின் சார்பில் கட்டிடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.தியாகராய நகரில் வணிகத்தை விட, மக்கள் பாதுகாப்பே முக்கியம்.கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்றே தொடங்கும்.இன்று மாலைக்குள் தீ முழுவதும் அணைக்கப்பட்டு, கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story