சென்னை சில்க்ஸ் கட்டிடம் 3 நாளில் இடித்து முடிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்


சென்னை சில்க்ஸ் கட்டிடம் 3 நாளில் இடித்து முடிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 1 Jun 2017 2:03 PM IST (Updated: 1 Jun 2017 2:54 PM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் 3 நாளில் இடித்து தரைமட்டம் ஆக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 2-வது நாளாக பற்றி எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று காலை சுமார் 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நேற்றிரவு 11.20 மணிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இதனையடுத்து காலை 7 மணியளவில் கட்டிடத்தின் முன்பகுதியும் இடிந்து விழுந்தது.

தி. நகர் உஸ்மான் சாலை முழுவதும் தீயால் புகை மூட்டம் சூழ்ந்திருக்கிறது. தீயணைப்பு வீரர்கள், அதைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

தீ விபத்தால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால், போலீசாரின் அறிவுரையின்பேரில் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில் தீ விபத்து என மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தீ பிடித்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு உள்ளது.

அடுக்குமாடியின் மேல்நின்று சென்னை சில்க்ஸ் தீவிபத்தை பார்க்கவேண்டாம் என குடியிருப்புவாசிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி உள்ளனர்.

தியாகராய நகரில் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தை அமைச்சர் ஜெயக்குமார் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திநகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் 2 மணி நேரத்தில் தொடங்கும். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்  3 நாளில் இடித்து தரைமட்டம் ஆக்கப்படும். அரசு செலவில் இடிக்கப்படும். கட்டிடம் இடிப்பு செலவை கட்டிட உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். அருகாமையில் கட்டிடங்கள் உள்ளதால், வெடி வைத்து தகர்க்கப்படாது. ஆட்கள், இயந்திரங்களை கொண்டே தகர்க்கப்படும், பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story