சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மீது ரூ.15 கோடி மோசடி புகார்


சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மீது ரூ.15 கோடி மோசடி புகார்
x
தினத்தந்தி 2 Jun 2017 12:45 AM IST (Updated: 1 Jun 2017 11:09 PM IST)
t-max-icont-min-icon

சசிகலாவின் உறவினரான நடிகர் பாஸ்கரன், ரூ.15 கோடி மோசடி செய்து விட்டதாக கூறி நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை ரசிகர் மன்றத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சசிகலாவின் உறவினர் பாஸ் என்ற பாஸ்கரன். நடிகரான இவர், ‘தலைவன்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இவரது வீடு நீலாங்கரையில் உள்ளது.

இவர், தனது பெயரில் ரசிகர் மன்றம் வைத்து உள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாகவும், தனது படம் வெற்றி பெற்றால் லாபத்தில் பங்கு தருவதாகவும், அரசியல் கட்சியில் பதவிகளை வாங்கித்தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ரூ.15 கோடி மோசடி

ஆனால் பாஸ்கரன், சொன்னபடி படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் ரூ.15 கோடி வரை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த ரசிகர் மன்றத்தினர், நேற்று நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த மோசடி தொடர்பாக பாஸ்கரன் மீது நீலாங்கரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து நீலாங்கரை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story