நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா? நரேந்திரமோடி 3 ஆண்டு கால ஆட்சி மீது அ.தி.மு.க. (அம்மா) கடும் தாக்கு


நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா? நரேந்திரமோடி 3 ஆண்டு கால ஆட்சி மீது அ.தி.மு.க. (அம்மா) கடும் தாக்கு
x
தினத்தந்தி 2 Jun 2017 3:45 AM IST (Updated: 2 Jun 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாடு காக்கும் அரசா? அல்லது மாடு காக்கும் அரசா? என்றும் அ.தி.மு.க. (அம்மா) அணி கடும் தாக்குதலை தொடுத்துள்ளது.

சென்னை,

நரேந்திரமோடி அரசு எந்திர, தந்திர மந்திரத்தை நம்பி இருப்பதாகவும், 3 ஆண்டு கால ஆட்சி நாடு காக்கும் அரசா? அல்லது மாடு காக்கும் அரசா? என்றும் அ.தி.மு.க. (அம்மா) அணி கடும் தாக்குதலை தொடுத்துள்ளது.

விமர்சனம் வைக்கவில்லை

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சிறை செல்ல நேரிட்டது. அதன்பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க.வில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் இருக்கிறார்.

வருமானவரி சோதனைக்கு உள்ளாகி, கலங்கிப்போன அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசிடம் போராடி தோற்றுப்போனது. இருப்பினும் தமிழக அரசும், அ.தி.மு.க. (அம்மா) அணி தலைவர்களும் மத்திய அரசை விமர்சனம் செய்யாமல் இருந்து வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினரும் மத்திய அரசு மீது எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை.

அ.தி.மு.க. (அம்மா) கருத்து

இதற்கிடையே அ.தி.மு.க. (அம்மா) அணியின் கட்சி பணிகளையும், ஆட்சி பணியையும் கவனித்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்து பேசினார். சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக அரசு சார்பிலும், அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடாகவும், அ.தி.மு.க. (அம்மா) அணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் நரேந்திரமோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சியை விமர்சனம் செய்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது. சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்த கருத்துகள் வருமாறு:-

நாடு காக்கும் அரசா?

மோடி அரசின் மூன்றாண்டு. இது நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா? இது சாதனை அரசா? சி.பி.ஐ. சோதனை அரசா? டிஜிட்டல் இந்தியா.... மேக் இன் இந்தியா... கிளன் இந்தியா... என வாயாலே வடைசுடும் அரசா? வாக்களித்த மக்களுக்கு விடை சொல்லும் அரசா?.

சகலரும் வாழ்த்தும் அரசா? சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா? கண்ணீர் துடைக்கும் அரசா? காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா? கருப்பு பணத்தை ஒழித்த அரசா? கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா? ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை... ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய் என வாக்குறுதி காத்த அரசா? வாய் ஜாலத்தில் ஏய்த்த அரசா?

பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா? பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா? மம்தா உயிருக்கு பதினோரு லட்சம் என்றெல்லாம் ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?

ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா? விலைவாசியை குறைத்த அரசா? வெட்டிப் பேச்சில் திளைத்த அரசா? ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு, ‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு.

நயவஞ்சக அரசு

ஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு, எய்ம்ஸ் தாமதம் உள்பட ஏராள மறுப்பு. வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால் இது நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?. எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு. ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story