குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 2 நாளில் சோதனை முறையில் தண்ணீர் எடுக்க முடிவு


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 2 நாளில் சோதனை முறையில் தண்ணீர் எடுக்க முடிவு
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து இன்னும் 2 நாட்களில் சோதனை முறையில் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

பருவ மழை பொய்த்துப் போனதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் வறண்டு விட்டன. கடும் வெயில், வறட்சி காரணமாக நிலத்தடி நீரும் வற்றி விட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் இன்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பல இடங்களில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடாக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்ய தமிழக அரசு மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்தது.

இதற்காக மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், திரிசூலம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருக்கும் தண்ணீர் குடிக்க உகந்ததா? என ஆய்வு செய்யப்பட்டது. அதில் அந்த நீரை பொதுமக்கள் குடிக்க பயன்படுத்தலாம் என உறுதிபடுத்தப்பட்டது.

சோதனை முறை

அதைதொடர்ந்து முதல் கட்டமாக மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் எடுத்து செல்வதற்காக குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். இன்னும் 2 நாட்களில் இந்த குவாரிகளில் இருந்து சோதனை முறையில் தண்ணீர் எடுக்கும் பணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

2 குழாய்கள் அமைப்பு

சிக்கராயபுரத்தில் உள்ள இந்த கல்குவாரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக எச்.டி., டி.ஏ. என இரண்டு வகையான குழாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கல் குவாரியின் மீது மேடு, பள்ளம், வளைவுகள் இருப்பதால் அதற்கேற்ப எச்.டி. குழாய்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேவைக்கு ஏற்ப குழாய்கள் வளைந்து, நெளிந்து செல்லும் வகையில் பொருத்தப்பட்டு உள்ளது.

மற்ற இடங்களில் டி.ஏ. என்ற குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த குழாய்கள் அசையாமல் இருக்க குழாயின் மீது இரும்பு வளையம் வைக்கப்பட்டு அது கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு தடுப்புடன் வெல்டிங் செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த வாரம்....

இங்குள்ள அனைத்து கல்குவாரியிலும் தண்ணீர் உள்ளது. அதில் 2 கல்குவாரிகளில் மட்டும் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. இதனால் ஒவ்வொரு குவாரியாக தண்ணீர் எடுக்க கீழ்ப்பகுதியில் 450 எச்.பி. திறன் கொண்ட ராட்சத மின் மோட்டார் வைக்கப்பட்டு உள்ளது. அனைத்து குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் வகையில் குழாய்கள் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு தயாராக உள்ளது.

ஒரு கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு அடுத்த கல்குவாரியில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு தண்ணீர் எடுக்கப்படும். இன்னும் இரண்டு நாட்களில் சோதனை முறையில் கல்குவாரியில் இருந்து இந்த குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படும். அப்போது இங்கு அமைக்கப்பட்டு உள்ள குழாயின் இணைப்புகளில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறதா? என்று பரிசோதனை செய்யப்படும்.

அதன்பிறகு அடுத்த வாரத்தில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து அனுப்பி வைக்கப்படும். பின் வரும் காலங்களில் இந்த கல்குவாரியின் அனைத்து பகுதிகளும் இணைக்கப்பட்டு மிகப்பெரிய நீர்தேக்கமாக மாற்றும் முடிவும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story