சேத்துப்பட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை திறக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சேத்துப்பட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை திறக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Jun 2017 1:44 AM IST (Updated: 2 Jun 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தை திறக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விற்பனைக்கூடம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் இயங்கிவரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டதாகும். தமிழகத்தில் அதிக அளவில் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இது மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

கடந்த 5 மாதங்களுக்கு முன் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 292 விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1.50 கோடியை தராமல் விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் ராஜசேகரனும், மொத்த வணிகர் கார்த்தி என்பவரும் மோசடி செய்துவிட்டனர். தங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும் வரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை திறக்க அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் கூறிவிட்டதால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது.

திறக்க வேண்டும்

இதனால் சேத்துப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை 30 கி.மீ. தொலைவில் உள்ள வேறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் கூடுதல் செலவும், நேர இழப்பும் ஏற்படுகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக அரசோ, ஆளுங்கட்சியினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசும், விற்பனைக்கூட அதிகாரிகளும் நினைத்தால் ஒரே நாளில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையும், பணியாளர்களுக்கு வேலையும் கிடைக்க வகை செய்ய வேண்டும். மேலும் முடங்கிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மீண்டும் திறந்து செயல்பட வைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story