கோவையில் அதிகாலையில் 4 பேரை காட்டு யானை மிதித்து கொன்றது


கோவையில் அதிகாலையில் 4 பேரை காட்டு யானை மிதித்து கொன்றது
x
தினத்தந்தி 2 Jun 2017 11:45 AM IST (Updated: 2 Jun 2017 11:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை 4 பேரை மிதித்து கொன்றது.

கோவை,

கோவை நகரை ஒட்டிய போத்தனூர், வெள்ளலூர் கோவைப்புதூர், மதுக்கரை பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இன்று அதிகாலை போத்தனூர் அருகே ஊருக்குள் புகுந்தது காட்டு யானை. கணேசபுரம் மூராண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 38). கைரேகை ஜோதிடர். இவரது மகள் காயத்ரி (12). இன்று அதி காலை இருவரும் வீட்டு முன்பு உறங்கிக் கொண்டிருந்தனர்.

தூங்கிக் கொண்டிருந்த காயத்ரியை மிதித்துக் கொன்றது. சத்தம் கேட்டு கண் விழித்த விஜயகுமாரையும் யானை மிதித்து தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

ஊர் மக்கள் ஒன்று திரண்டு யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அதற்குள் யானை அங்கிருந்து ஓடி  சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளளூருக்கு சென்றது.

அங்கு அதிகாலை 5 மணி அளவில் வெள்ளளூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மனைவி நாகரத்தினம் (வயது 50), மாரியப்பன் என்பவரது மனைவி ஜோதிமணி(68) ஆகியோர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றனர். அப்போது காட்டு பகுதிக்குள் நின்ற ஒற்றை யானை இவர்கள் இருவரையும் தாக்கியது.

சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இவர்கள் வேல், கம்புகளுடன் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த யானை பொது மக்களை விரட்டத் தொடங்கியது. இதனால் பொது மக்கள் தலைதெறிக்க ஓடினர். இதில் கீழே விழுந்து அப்பகுதியை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையே யானை வெள்ளலூர் வெள்ளபாளையம் பகுதிக்கு சென்றது. அங்கு  பழனிசாமியை (73)என்பவரை  தூக்கி வீசியது. இதில் அவரும் படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்த நாகரத்தினம், ஜோதிமணி, பழனிசாமி ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே நாகரத்தினம், ஜோதிமணி ஆகியோர் இறந்தனர். பழனிசாமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

யானை மிகவும் ஆக்ரோச மாக காணப்படுவதால் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து காட்டுக்குள் விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  கும்கி யானைகளை வரவழைத்து  காட்டு யானையின் ஆக்ரோசத்தை அடக்கி அதன்பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

Next Story