”ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் எங்கள் அணிக்கு வரத் தயாராக உள்ளனர்” - அமைச்சர் ஜெயக்குமார்.


”ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் எங்கள் அணிக்கு வரத் தயாராக உள்ளனர்” - அமைச்சர் ஜெயக்குமார்.
x
தினத்தந்தி 2 Jun 2017 1:57 PM IST (Updated: 2 Jun 2017 2:01 PM IST)
t-max-icont-min-icon

”ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் எங்கள் அணிக்கு வரத் தயாராக உள்ளனர்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ராயபுரம்,

தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் ராயபுரம் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 227 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். விழா முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு இன்று வந்தாலும் சரி, நாளை வந்தாலும் சரி. எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். அது போன்று  நாங்கள் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.

விரைவில் பொதுத்தேர்தல் வரும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஒருவேளை இந்த ஆட்சி தொடரக் கூடாது என அவர் நினைக்கிறாரோ? என்னவோ. அப்படி அவர் நினைத்தால் அம்மாவின் (ஜெயலலிதாவின்) ஆன்மா அவரை மன்னிக்காது.

அவரது அணியில் பதவியில் இல்லாதவர்களை சாந்தப்படுத்த அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப் பையை காட்டி ஏமாற்றுவது போன்று விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்கிறார். எனவே தற்போது நிச்சயமாக பொதுத் தேர்தல் வராது. வருகிற 2021-ம் ஆண்டுதான் தேர்தல் வரும்.

புரட்சி தலைவி அம்மா பல்வேறு சோதனைகள் மற்றும் வேதனைகளை கடந்து போராட்டத்தையும் தாண்டி இந்த ஆட்சியை தக்க வைத்துள்ளார். தற்போது பொதுத் தேர்தல் வர மக்களுக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் விருப்பம் இல்லை. ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள நிர்வாகிகள் எங்கள் அணிக்கு வர தயாராக உள்ளனர்.

ஜாமீனில் விடுதலை ஆகி இருக்கும் டி.டி.வி.தினகரனை சந்திக்க மாட்டோம் எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இந்த அரசும் ஆட்சி எந்திரமும் செயல்படுகிறது. யாரும் எங்களை பின்னால் இருந்து இயக்கவில்லை.

பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம்  விரைவில் முடிவெடுக்கும். அப்போது அனைத்து  கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story