சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்”


சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்”
x
தினத்தந்தி 3 Jun 2017 5:45 AM IST (Updated: 3 Jun 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.

சென்னை,

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சினிமா படங்கள் மீது 28 சதவீத வரி


இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு


இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

பெரிய தண்டனை

சினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை.

பல முதல்-அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

இந்தி படங்கள்


ஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை.

இந்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி படங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள். ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது.

சினிமாவை விட்டு விலகல்


பிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்.

வரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். அதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

பேட்டியின்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story