கவிஞர் அப்துல்ரகுமான் காலமானார் உடல் அடக்கம் இன்று நடக்கிறது


கவிஞர் அப்துல்ரகுமான் காலமானார் உடல் அடக்கம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 3 Jun 2017 3:30 AM IST (Updated: 3 Jun 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

கவிஞர் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் நேற்று காலமானார். அவரது உடல் அடக்கம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

சென்னை,

இலக்கிய உலகில் ‘கவிக்கோ’ என்று அழைக்கப்பட்ட கவிஞர் அப்துல் ரகுமான் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அடுத்த பனையூரில் வசித்து வந்த அப்துல் ரகுமானுக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு, காலமானார். இவருக்கு வகிதா என்ற மகளும், டாக்டர் செய்யது அஷ்ரப் என்ற மகனும் உள்ளனர். மனைவி மஹபூப் பேகம் 2012-ம் ஆண்டு காலமாகி விட்டார்.

கவிஞர் அப்துல்ரகுமான் 1937-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி மதுரை கிழக்கு சந்தை பேட்டையில் உருது கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத்-ஜைனத் பேகம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். தனது தொடக்ககல்வியையும், உயர்நிலைப்பள்ளி கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளிலேயே பயின்றார். பின்னர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று எம்.ஏ., பி.எச்.டி. பட்டங்களை பெற்றார்.

தமிழ்த்துறையின் தலைவர்

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராக பணியாற்றிய ச.வே.சுப்பிரமணியத்தை வழிகாட்டியாக கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961-ம் ஆண்டில் வாய்ப்பு கிடைத்தது. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என படிப்படியாக உயர்ந்து 1991-ம் ஆண்டில் முழு நேர இலக்கிய பணிக்காக அவர் விருப்ப ஓய்வு பெற்றார். பணியாற்றிய 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011-ம் ஆண்டு வரை இருந்தார்.

கவிதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு என இலக்கிய உலகுக்கு அவர் எண்ணற்ற வளங்களை அள்ளி தெளித்துள்ளார். பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை பாராட்டி முத்தமிழின் முகவரி என்ற கவியரங்க கவிதையையும் அவர் பாடியுள்ளார்.

விருதுகள்

கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தி.மு.க. சார்பில் கலைஞர் விருது, ஆலாபனை கவிதை தொகுதிக்காக 1999-ம் ஆண்டு டெல்லி சாகித்திய அகாடமி விருது பெற்றார். பொதிகை விருது, கம்பர் விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் அவர் பெற்றிருக்கிறார்.

2007-ம் ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசையும் அவர் பெற்றார். காக்கைச்சோறு என்ற இவரது நூலுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் இலக்கிய பரிசு (ரூ.1 லட்சம்) வழங்கப்பட்டது. அரபி, பாரசீகம், உருது ஆகிய மொழிகளில் புகழ்பெற்ற கஸல் வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் தமிழகத்தில் பரவ காரணமாக இருந்தவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம், சமணம் உள்ளிட்ட சமய கூட்டங்களில் கலந்துகொண்டு சமய உறவுக்கும், மத நல்லிணக்கத்துக்கும் முன் உதாரணமாக திகழ்ந்தார்.

மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தமிழக அரசின் ஆட்சி மொழிக்குழுவின் ஆலோசகராகவும், தமிழக அரசின் குறள் பீடச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றிவர். மத்திய அரசின் செம்மொழி வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார். கவிதை வாசிப்பு, சொற்பொழிவு ஆகியவற்றுக்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் சுற்றுப்பயணம் செய்தார்.

இலக்கிய உலகில் கொடி கட்டி பறந்தாலும், அரசியல் கட்சி தலைவர்களிடமும், பல்வேறு அமைப்பு நிர்வாகிகளிடமும் நட்பு பாராட்டினார்.

அப்துல் ரகுமானின் மறைவு செய்தியை அறிந்ததும் ஏராளமானவர்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டதுடன், அவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று இறுதிச் சடங்கு

அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு, பனையூரில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

அவரது உடல் பகல் 12.30 மணிக்கு கொட்டிவாக்கம் பள்ளிவாசலில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Next Story