அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்வார் அமைச்சர் செங்கோட்டையன்


அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்வார் அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 3 Jun 2017 10:49 AM IST (Updated: 3 Jun 2017 10:49 AM IST)
t-max-icont-min-icon

அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்வார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந்தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களும், இந்த வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரும் தனிக்கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, உரிய ஜாமீன் நடைமுறைகளுக்கு பிறகு நேற்று இரவு இருவரும் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். நேற்று டெல்லியிலேயே தங்கிய டிடிவி தினகரன் இன்று காலை சென்னை புறப்பட்டார். முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், சென்னை சென்று கட்சி பணிகளை தொடர்வேன் என்றார்.

நான் கட்சியில் துணை பொதுச் செயலாளராக நீடிப்பேன். கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், திருத்தணியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் அதிமுகவில் டிடிவி தினகரன் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார். இதிலிருந்து கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஒன்று திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவர் செங்கோட்டையன். தற்போது அவர் தினகரனுக்கு எதிராக பேசியிருப்பது அதிமுக அம்மா வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.


Next Story