கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல குவிந்த தொண்டர்கள்


கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல குவிந்த தொண்டர்கள்
x
தினத்தந்தி 3 Jun 2017 2:05 PM IST (Updated: 3 Jun 2017 2:04 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி பிறந்த நாளையொட்டி வாழ்த்து சொல்ல சென்னை கோபாலபுரம் வீட்டில் தொண்டர்கள் குவிந்தனர்.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 93 வயது முடிந்து 94-வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும், சட்டமன்றத்தில் அவர் 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து  எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதால் சட்டமன்ற வைர விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு தொண்டர்கள் அதிக அளவில் வந்தார்கள். நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீட்டு வாசலில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி வீட்டு முன்பு திரண்டு இருந்தனர். டாக்டர் கலைஞர் வாழ்க என்று கோஷமிட்டபடி உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

நேற்று இரவு 11.30 மணி வரை கருணாநிதி வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். இன்று காலையில் அவர் எழுந்து உட்கார்ந்தார். அவரை டாக்டர் கோபால் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

அதன் பிறகு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். சிறிது நேரம் கருணாநிதியுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., செல்வி, மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதியின் உடல் நலம் கருதி அவரை வேறு யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கருணாநிதியை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி தனது பிறந்த நாளுக்கு அண்ணா சமாதி, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர் களை சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உடல் நிலை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

தொண்டர்களையும் சந்திக்கவில்லை. ஆனாலும் உற்சாக மிகுதியில் தொண்டர்கள் இன்று காலையிலேயே கோபாலபுரம் வீட்டு வாசலில் திரண்டு நின்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

கோபாலபுரத்தில் இருந்த மு.க.ஸ்டலினை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு சென்றனர். இதே போல கனிமொழி எம்.பி.யிடமும் மகளிர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டபேரவை வைரவிழா  பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.  தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்- மந்திரி பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர்  முகைதீன், புதுச்சேரி முதல்-மந்திரி வி.நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Next Story