சென்னை புரசைவாக்கம் வணிக வளாகத்தில் தீ விபத்து துணிக்கடை எரிந்து நாசம்


சென்னை புரசைவாக்கம் வணிக வளாகத்தில் தீ விபத்து துணிக்கடை எரிந்து நாசம்
x
தினத்தந்தி 4 Jun 2017 2:30 AM IST (Updated: 4 Jun 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புரசைவாக்கம் தனியார் வணிக வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிக்கடை எரிந்து நாசம் ஆனது.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 மாடி துணிக்கடையில் கடந்த 31-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானது. தற்போது அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலை அபிராமி திரையரங்கம் அருகே ‘சன்டெக் சிட்டி’ என்ற பெயரில் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் துணிக்கடைகள், பேன்சி ஸ்டோர், ராசிக்கல் விற்பனை கடை, ‘எலைட்’ டாஸ்மாக் மதுபான கடை உள்பட 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

திடீர் தீ விபத்து

வணிக வளாகத்தின் தரை தளத்தில் வேப்பேரியை சேர்ந்த சுசீலா (வயது 50) என்பவரது துணிக்கடை உள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் அவருடைய கடையில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர். கடையை விட்டு அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது.

துணிக்கடை என்பதால் தீ மளமளவென அருகில் உள்ள ராசிக்கல் கடைக்கும் பரவியது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அனைத்து கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டன. கடைகளின் உரிமையாளர்களும், பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அவசர அவசரமாக வணிக வளாகத்தை விட்டு வெளியேறினர்.

‘எலைட்’ மதுபானக்கடையில் மதுபானம் வாங்க வந்திருந்த மதுபிரியர்களும் ஓட்டம் பிடித்தனர்.

துணிக்கடை எரிந்து நாசம்

தகவல் அறிந்ததும் கீழ்ப்பாக்கம், எழும்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். தீயணைப்பு வீரர்கள் சாதுர்யமாக செயல்பட்டு தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

தீப்பிடித்து எரிந்த துணிக்கடை, ராசிக்கல் கடையில் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் துணிக்கடை முற்றிலும் எரிந்து நாசமானது. ராசிக்கல் கடை பாதி தீக்கிரையானது.

ரூ.10 லட்சம் சேதம்

தீ விபத்து குறித்து தலைமை செயலக காலனி போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் துணிக்கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. தீ விபத்து சேத மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வணிக வளாக உரிமையாளர் மகேந்திர குமார் தடுத்தார். அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று ஆவேசமாக குரல் எழுப்பினார். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சம்பவ இடத்துக்கு வந்து, தீ விபத்து நடந்த கடைகளை செல்போனில் படம் பிடித்தார். அப்போது அவர், வணிக வளாகங்களில் தொடரும் தீ விபத்துக்கள் குறித்து வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனும் வணிக வளாகத்தை பார்வையிட்டார். 

Next Story