கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
உடனடி நடவடிக்கைகள்கத்தார் உடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக்கொள்வதாக சவுதி தலைமையில் உள்ள நாடுகள் அறிவித்ததன் விளைவாக இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கத்தாரில் வாழ்ந்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த 6½ லட்சம் மக்களிடம் உருவாகியுள்ள அச்சத்தை போக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி உங்களுக்கு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
கத்தாரில் வாழும் தங்களது உறவினர்கள் குறித்து இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பங்கள் பெரும் கவலையில் உள்ளன. எனவே, சூழ்நிலையின் அவசியம் கருதி, தற்போதைய பதற்ற நிலை கத்தாரில் உள்ள இந்தியர்களின் நலனை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தூதரக உதவியை உங்களிடம் கோருவது என்னுடைய கடமையாகும்.
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்‘வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பிளவு என்பது வளைகுடா கூட்டுறவு கவுன்சிலுக்கான உட்புற பிரச்சினை’ என நீங்கள் கூறிய கருத்தின் அடிப்படையில், நம்முடைய மக்களின் பாதுகாப்பு நமக்கு மிக முக்கியமானது ஆகும். கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தேவையான தூதரக நடவடிக்கைகளை உங்களுடைய தலைமையிலான வெளியுறவுத் துறை ஏற்கனவே துவங்கியிருக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.
எனவே, இதுபோன்ற சிக்கலான நேரங்களில், கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தோஹாலில் உள்ள தூதரகத்தை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.