இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுடன் போலீசார் ஆலோசனை


இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுடன் போலீசார் ஆலோசனை
x
தினத்தந்தி 7 Jun 2017 1:31 AM IST (Updated: 7 Jun 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையடுத்து மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து சென்னையில் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் கூடுதல் கமி‌ஷனர்கள் சங்கர், ஜெயராம், இணை கமி‌ஷனர்கள் பாஸ்கரன், சந்தோஷ்குமார், பவானீஸ்வரி, பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் கலந்து கொண்டனர். 300–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கண்காணிப்பு கேமரா

கூட்டத்தில், பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து கொள்ள வேண்டும்.

மாணவ–மாணவிகளை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ பள்ளி வாசலில் வந்துதான் அழைத்துச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களுடன் குழந்தைகளை அனுப்பி வைக்கக்கூடாது.

அடிக்கக்கூடாது

மாணவ–மாணவிகளை அடித்து துன்புறுத்தக்கூடாது. கவுன்சிலிங் மூலம் தான் அறிவுரை வழங்க வேண்டும். யோகா பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். மாணவ–மாணவிகள் வகுப்பு அறைக்குள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களும், பாதுகாப்பு தொடர்பாக போலீசார் என்னென்ன செய்ய வேண்டும்? என்று ஆலோசனை வழங்கினார்கள்.


Next Story