உடல்நல குறைவால் முன்னாள் எம்.பி. இரா.செழியன் மரணம்; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
வேலூரில் முன்னாள் எம்.பி. இரா.செழியன் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வேலூர்,
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் கிராமத்தில் பிறந்த இரா.செழியனின் பெற்றோர் வி.எஸ்.ராஜகோபால், மீனாட்சிசுந்தரம் ஆவர். இரா.செழியன் 1939-ம் ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சி பெற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று 1944-ம் ஆண்டு கணிதத்தில் பி.எஸ்சி., ஆனஸ் பட்டம் பெற்றார்.
கவுரவ பேராசிரியர்
பேரறிஞர் அண்ணாவின் மீது கொண்ட பற்றால் 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைந்து கொண்டு பணியாற்றி வந்தார். சிறந்த படைப்பாளியான இவர் பாராளுமன்ற விதிகள் சம்பந்தமாக பல்வேறு நூல்களை எழுதியதுடன் பல்வேறு பத்திரிகைகளுக்கு அரசியல் விமர்சன கட்டுரைகளும் வழங்கி வந்தார்.
தனது அரசியல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மேலும், அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்தார்.
உடல் தகனம்
மறைந்த இரா.செழியன் உடலுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன், துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர்கள் வி.ராஜூ, வி.குணசேகரன், நாராயணன், பதிவாளர் சத்தியநாராயணன், முன்னாள் மத்திய இணை மந்திரி என்.டி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, எஸ்.ஈஸ்வரப்பன், ஏ.பி.நந்தகுமார் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து முன்னாள் எம்.பி. இரா.செழியன் உடல், மாலையில் வி.ஐ.டி. பல்கலைக்கழக பேராசிரியர்கள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.
தலைவர்கள் இரங்கல்
இரா.செழியன் மறைவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் இரா.செழியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.