பத்திர பதிவு செலவு குறையும்; தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு; நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைப்பு


பத்திர பதிவு செலவு குறையும்; தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு; நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 5:45 AM IST (Updated: 9 Jun 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் பத்திர பதிவு செலவு குறையும் என்று கூறப்படுகிறது.

சென்னை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது.

25 நிமிடங்கள் கூட்டம் நீடித்தது.

பத்திர பதிவு

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். விமான சேவை குறைபாடு தொடர்பாக சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் மட்டும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.

இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்–அமைச்சர் செயலக அதிகாரிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய அம்சமாக பத்திர பதிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

குறைப்பு

பதிவு துறையில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டது. நில மதிப்பு குறைந்த நிலையில்கூட நிலங்களுக்கான சந்தை வழிகாட்டி மதிப்பு ஏற்கனவே உயர்ந்தப்பட்ட நிலையிலேயே நீடிக்கிறது. எனவே, அதன் அடிப்படையிலேயே பத்திர பதிவு கட்டணமும் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கிறது.

இந்த கட்டணத்தில் பத்திர பதிவு செய்ய மக்கள் தயங்கியதால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் வெகுவாக குறைந்து. எனவே, வழிக்காட்டி மதிப்பீட்டுத் தொகையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பத்திர பதிவு செலவு குறையும்.

அரசு அறிவிப்பு

அமைச்சரவை கூட்டம் முடிந்தபிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

2016–ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பத்திர பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதை கருத்தில்கொண்டு, பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 முதல் 33 சதவீதம் அளவு குறைத்து ஆணையிட்டுள்ளது.

அமைச்சரவை முடிவு

இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய விற்பனை (கன்வேயன்ஸ்), பரிமாற்றம் (எக்ஸ்சேஞ்ச்), தானம் (கிப்ட்) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக்கொடுக்கப்படும் ஏற்பாடு (செட்டில்மெண்ட்) போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு 9.6.2017 முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

ஒரு சொத்தை விற்கும்போதோ, வாங்கும்போதோ, அதன் கிரய மதிப்பைவிட, அரசு வழிகாட்டி மதிப்பின்படியே சார்–பதிவாளர் அலுவலகங்களில் முத்திரை கட்டணமும், பதிவு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், 2012–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி புதிய வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வந்தது. ஆனால், வகைபாடு ரீதியாக இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

உதாரணமாக, குடியிருப்பு பகுதிகள் 4 வகையாக மதிப்பிடப்படும். அதாவது, குடியிருப்பு பகுதிகளின் சந்தை விலை, வசதிகள் அடிப்படையில் சார்–பதிவாளர்களால் நியமிக்கப்படும். ஆனால், அதிக மதிப்பு நிர்ணயிக்க வேண்டிய இடங்களுக்கு குறைந்த மதிப்பும், குறைந்த மதிப்பு நிர்ணயிக்க வேண்டிய இடங்களுக்கு அதிக மதிப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, வழிகாட்டி மதிப்பு குளறுபடியை முதலில் சரிசெய்ய வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாக உள்ளது.

வருவாய் இழப்பு

பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது, வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைப்பதன் மூலம் ரூ.900 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்துவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.


Next Story