மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jun 2017 12:47 AM IST (Updated: 10 Jun 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் புதிதாக 70 இடங்களில் மணல் குவாரி அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சுற்றுச்சூழலை பாதிக்கும்

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க 70 இடங்களில் புதிய மணல் குவாரிகளை தொடங்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மணல் குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கு கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில் இவ்வளவு குவாரிகளை திறப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாலும், மாற்று மணல் குறித்து மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதாலும் ஆற்று மணலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மை தான். இத்தகைய சூழலை அறிவார்ந்த நடவடிக்கைகளின் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தான் சமாளிக்க வேண்டும். மாறாக, தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைக்கத் துடிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

பா.ம.க. போராட்டம்

கூடுதல் குவாரிகளை அமைப்பதால் மற்ற மாநிலங்களுக்கு மணல் கடத்துவது தான் அதிகரிக்கும். எனவே, 70 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, மாற்று மணல் உற்பத்தியை அதிகரிக்கவும், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிப்படியாக மணல் குவாரிகளை மூடி, தமிழகத்தை மணல் குவாரி இல்லாத மாநிலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தி, புதிய மணல் குவாரிகளை திறக்கும் முயற்சியை பா.ம.க. தடுத்து நிறுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story