உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி திடீர் சாவு


உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி திடீர் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2017 2:45 AM IST (Updated: 10 Jun 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்றுவந்த மாணவி திடீரென இறந்தார். இதுதொடர்பாக போலீசார் 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சினம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் சக்தி. அவருடைய மனைவி மங்கையர்கரசி கோர்ட்டு ஊழியர். இவர்களுடைய ஒரே மகள் பாக்யஸ்ரீ (வயது 17) ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு, 2-ம் ஆண்டு செல்ல இருந்தார்.

பாக்யஸ்ரீ 60 கிலோ எடை இருந்தார். அதனால் தன்னுடைய உடல் எடையை குறைக்க சிகிச்சை பெறவேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது அதிக எடை இல்லை என்று கூறினாலும், அதை ஏற்க மறுத்த பாக்யஸ்ரீ எடையை குறைக்க வேண்டும் என்று கூறினார். அவருக்கு ஏற்கனவே கண்பார்வை குறைபாடும், தீராத சளித்தொல்லையும் இருந்தது.

எடை குறைப்பு சிகிச்சை

சக்தியின் உறவினர் நவீன்பாலாஜி ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமியூரில் இயற்கை மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் கடந்த 2-ந் தேதி பாக்யஸ்ரீயை அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அவர்களும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர். டாக்டர் நவீன்பாலாஜி பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்துவந்தார்.

இதற்கிடையே மங்கையர்கரசியின் தம்பி திருமணம் கடந்த 7-ந் தேதி நடந்தது. பாக்யஸ்ரீயை பார்த்துக்கொள்வதாக நவீன்பாலாஜி கூறியதால் அவரது பெற்றோர் அந்த திருமணத்துக்கு சென்றுவிட்டனர்.

திடீர் சாவு

இந்தநிலையில் சிகிச்சை பெற்றுவந்த பாக்யஸ்ரீ நேற்று முன்தினம் காலை திடீரென இறந்துவிட்டார். ஆஸ்பத்திரி பணியாளர்கள் பாக்யஸ்ரீயின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அவருடைய பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு மகளை பார்ப்பதற்காக சக்தியும், மங்கையர்கரசியும் புறப்பட தயாராக இருந்தனர். அப்போது வீட்டுக்குள் மருத்துவமனை பணியாளர்கள் பாக்யஸ்ரீயின் உடலை கொண்டுவந்து வைத்துவிட்டு, ‘உங்கள் மகள் இறந்துவிட்டார்’ என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

தங்களது ஒரே மகள் பிணமாக கொண்டுவரப்பட்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்கள். உறவினர்களுடன் ஒரு அம்புலன்சில் பாக்யஸ்ரீயின் உடலை ஏற்றி மீண்டும் நவீன்பாலாஜியின் மருத்துவமனைக்கே கொண்டு சென்றார்கள். உடலை ஆஸ்பத்திரிக்குள் வைத்து முற்றுகையிட்டார்கள்.

8 பேர் மீது வழக்கு

பின்னர் கவுந்தப்பாடி போலீசில் இதுகுறித்து மங்கையர்கரசி புகார் அளித்தார். அதில் ‘என்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. தவறான சிகிச்சையால் தான் என் மகள் இறந்துவிட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

போலீசார் மருத்துவமனைக்கு சென்று பாக்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் நவீன்பாலாஜி, கல்பனா, நிவேதினி மற்றும் நிர்வாகிகள் மாலதி, வர்மா, பணியாளர்கள் பிரியதர்ஷினி, தேவிமோகன், ஜோதி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த மருத்துவமனையை அதன் நிர்வாகிகளே பூட்டிவிட்டனர்.

நிர்வாகி மீது தாக்குதல்

இதற்கிடையே, பாக்யஸ்ரீயின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த உறவினர்கள் தெரிவித்தனர். அப்போது டாக்டர்கள் நவீன் பாலாஜி, கல்பனா ஆகியோர் அங்கு வந்தனர். மாணவியின் உறவினர்களுக்கும், நவீன் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர் தாக்கப்பட்டார்.

போலீசார் அவரை மீட்டு அழைத்துச்சென்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை ஏற்று மாணவியின் உடலை பெற்றுச்சென்றனர். 

Next Story