ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. நேற்று சந்திப்பு: டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 33 ஆனது
ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் நேற்று டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னை,
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
தினகரனுக்கு பதவிஅ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன், கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்ததுடன் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட தொடங்கினார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (அம்மா) வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களம் இறங்கினார். இதனால், டி.டி.வி.தினகரன் முதல்–அமைச்சராக முயற்சிப்பார் என்பதால், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்புஆனால், தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக புகார் வந்ததால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக அறிவித்தனர். ஆனாலும் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் போன்றோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். டி.டி.வி.தினகரன் ஜாமீன் பெற்று கடந்த 2–ந்தேதி சிறையில் இருந்து விடுதலையாகி வந்தார்.
மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவுஅவர் சென்னை திரும்பியதும் எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை(ராதாபுரம்), ராஜன்செல்லப்பா(மதுரை), தங்கதுரை(நிலக்கோட்டை), முத்தையா(பரமக்குடி) தூசிமோகன்(செய்யாறு), பன்னீர்செல்வம்(கலசப்பாக்கம்) உள்ளிட்ட 32 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
கடந்த 8–ந்தேதி டி.டி.வி.தினகரன் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் அங்குவந்து டி.டி.வி.தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
33 ஆக உயர்வுஇதன்மூலம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில எம்.எல்.ஏ.க்களும் அவருக்கு ஆதரவு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.